முகப்பு /செய்தி /திருச்சி / வெடிகுண்டை கண்டுபிடிக்க போய் கறிக்குழம்பை மோப்பம் பிடித்த நாய்.. டென்ஷன் ஆன திருச்சி போலீசார்..

வெடிகுண்டை கண்டுபிடிக்க போய் கறிக்குழம்பை மோப்பம் பிடித்த நாய்.. டென்ஷன் ஆன திருச்சி போலீசார்..

கறிக்குழம்பை மோப்பம் பிடித்த நாய்

கறிக்குழம்பை மோப்பம் பிடித்த நாய்

Trichy News : திருச்சியில் வெடிகுண்டு சோதனைக்கு வந்த மோப்பநாய் ஒன்று கோழிக் குழம்பு வாசனையால் திசைமாறியது காவல்துறையினருக்கே சத்திய சோதனையாய் அமைந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது சிக்கன் கிரேவி வாசத்தால் ஈர்க்கப்பட்ட மோப்ப நாயால் போலீசார் பரபரப்படைந்தனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் ஹவ்ரா செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய் ராக்கி உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

ரயில் மற்றும் ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ரயில் நிலைய நடைமேடையில் ஒரு பயணி கொண்டு வந்திருந்த பையை மோப்பநாய் தீவிரமாக மோப்பம் பிடித்தது. நீண்ட நேரமாக அந்தப் பையை விடாமல் நாய் மோப்பம் பிடித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் பதற்றத்துடன் அந்த பயணியிடம் இருந்து பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு எவர்சில்வர் தூக்கு டிபன் பாக்ஸ் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் அந்த டிபன் பாக்ஸை திறந்து பார்த்தனர். அப்போது அதில் சிக்கன் கிரேவி சமைத்து அந்த பயணி எடுத்து வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிக்கன் கிரேவி வாசத்தில் தான் மோப்பநாய் பையை சுற்றி சுற்றி வந்துள்ளது தெரியவந்தது. டிபன் பாக்ஸில் சிக்கன் கிரேவி இருந்ததால் போலீசார் நிம்மதி அடைந்து தங்களது சோதனை பணியை தொடர்ந்தனர்.

வெடிகுண்டை கண்டுபிடிக்க வந்த மோப்பநாய் கோழிக் குழம்பு வாசனையால் திசைமாறியது காவல்துறையினருக்கே சத்திய சோதனையாய் அமைந்தது. மேலும் வெடிகுண்டு இருக்குமோ என சற்றுநேரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் பதட்டத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி

First published:

Tags: Local News, Trichy