தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், "கல்லூரி கனவு" என்னும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் மற்றும் மேற்படிப்பு முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து, புகழ்ப்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி, திருச்சி காட்டூரில் உள்ள மாண்ட்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதிப் குமார் பேசியபோது, "மேற்படிப்பை தேர்ந்தெடுக்கும் போது, உங்களுக்கு உள்ள ஆர்வம் மற்றும் வேட்கையை புரிந்துக் கொள்ள வேண்டும். ஆர்வம்- வேட்கை என்ன வித்தியாசம் என்றால், எல்லோரும் படிப்பதையே நீங்களும் படித்தால் அது ஆர்வம். ஆனால், ஒரு துறை குறித்து நன்கு தெரிந்து, அதை தேர்ந்தெடுத்து படிப்பது வேட்கை. எனவே ஒரு துறை குறித்து நன்கு அறிந்து அதை படிப்பது நல்லது. ஆசிரியர்கள் எப்போதும் ஏணியாக இருப்பார்கள். ஆனால், நீங்கள்தான் ஏற வேண்டும். இந்த நிகழ்வு கல்லூரிப் படிப்பு குறித்த உங்களது கல்விக் கண்ணை திறக்கும் என்றார்.
யானைக்கதை
ஒரு பெரிய யானையை சிறிய கயிற்றில் கட்டி வைத்திருந்தனர். அதைக் கண்டு பயந்த சிலர் அந்த யானைப்பாகனிடம் சென்று "பெரிய கயிற்றை கொண்டு கட்டுங்கள்; யானை இந்த சிறிய கயிற்றை அறுத்துவிடும்" என்றனர்.
அதற்கு அவர், "இந்த யானை குட்டியாக இருக்கும் போது இதே கயிற்றினால் தான் கட்டிப் போட்டோம். அப்போது அந்த கயிற்றை பலமுறை அறுக்க முயற்சி செய்தது. ஆனால் அதனால் முடியவில்லை.
ஒருகட்டத்தில் தன்னால் தப்பிக்க முடியாது என்று தெரிந்து கொண்டது. அப்போதில் இருந்து தற்போது பெரிய யானையாக வளர்ந்தாலும், அந்த கயிறை அறுக்க முயற்சி செய்வதில்லை. ஒருபோதும் அறுக்காது. நீங்கள் பயப்படாதீர்கள்" என்றார்.
இந்த கதை மூலம் மாணவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். 'உனக்கு கணிதம் வராது.. சமூக அறிவியல் வராது..' என்று யானை கயிறு போல, சின்ன வயதில் இருந்தே நம்மில் ஒரு தவறான விதை விதைக்கப்பட்டுள்ளது. அந்த தடையை உடைத்தெறிந்து வெளியே வர வேண்டும்.
தவளைக் கதை
ஒரு தவளைக் கூட்டத்தில் இருந்த இரண்டு தவளைகள், ஆழமான குழிக்குள் விழுந்துவிட்டன. இரண்டு தவளைகளும் மேலே வர கடுமையாக முயற்சி செய்தன. ஆனால் மேலே இருந்த தவளைக் கூட்டம், 'இது மிகவும் ஆழம். நீங்கள் மேலே வருவதற்கு வாய்ப்பே இல்லை' என்றன. அதைக் கேட்டு ஒரு தவளை முயற்சியை கைவிட்டு அங்கேயே இறந்து விட்டது.
ஆனால் இன்னொரு தவளை மட்டும் விடா முயற்சியுடன் போராடி மேலே வந்துவிட்டது. உடனே அதை சூழ்ந்து கொண்ட தவளைக் கூட்டம் "எப்படி மேலே வந்தாய்" என்று கேட்டன.
அதற்கு அந்த தவளை சொன்னதாம் "எனக்கு காது கேட்காது" என்று. எனவே, ஊரே ஒன்றுகூடி உங்களால் முடியாது என்று சொன்னாலும் அந்த தவளை போல, காது கேளாதவர் போல் இருந்து, விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றிப் பெறுங்கள்"என்றார்.
Also see... தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பிளஸ் டூ மார்க்
நான் அரசுப்பள்ளியில் படித்தவன். சமூக அறிவியல் ஆசிரியரிடம் மதிப்பெண் வழங்குவது குறித்து விவாதம் செய்ததால், 10ம் வகுப்பில் அவர் பாட வேளையில் மட்டும் வெளியே நிறுத்தப்பட்டவன்.
மேல்நிலைக் கல்வியை அரசு உதவிப்பெறும் பள்ளியில் படித்தேன். தவறான சேர்க்கை காரணமாக மதிப்பெண்கள் குறைந்தது.
பிளஸ் டூவில் நான் படித்தபோது வாங்கிய மதிப்பெண்கள், 899. என்னை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் இங்கே நிறைய பேர் இருப்பீர்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்களை விட குறைவாக மதிப்பெண்கள் எடுத்த நானே படித்து மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ள போது, உங்களால் ஏன் மாவட்ட ஆட்சியராக முடியாது?" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th Exam results, District collectors, School students