"தமிழக கவர்னரின் கருத்தை மாற்றி பேசுவதும், காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதும் ஆளும் அரசுக்கு வழக்கமாகிவிட்டது" என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின், 120வது பிறந்தநாள் விழாவையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்வர் நலம்
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தாரிடையே தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். அவர் நன்றாக இருப்பதாகவும், சிறிது ஓய்வெடுத்த பிறகு, விரைவில் பணிக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று கனிவோடு செயல்பட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக உரங்களை வழங்க வேண்டும். இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
பொதுப்பணித்துறை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும்.
சன்மார்க்க சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர் ஊரன் அடிகளார் மறைவு, தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் ஏற்பட்டுள்ற மிகப்பெரிய இழப்பு" என்றார்.
அரிசிக்கு வரி
"அரிசிக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, "GST வரி ஏற்ற, இறக்கம் என்பது நிரந்தரமல்ல.
நிதித்துறையை பொறுத்தவரையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதில், மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டு, சாதக, பாதகங்களை கேட்டு தெரிந்து கொண்டு முடிவு எடுக்கிறார்கள்.
மக்களை பாதிக்கின்ற முடிவென்றால் அதனை மறுபரீசிலனை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது" என்றார்.
கவர்னர் மீது காழ்ப்புணர்ச்சி
"திராவிடம் என்பது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சொல் என்ற ஆளுநரின் பேச்சு குறித்த கேள்விக்கு", "கவர்னரின் கருத்தை மாற்றி, மாற்றி பேசுவதும், அவரின் கருத்தை காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதும் ஆளும் கட்சிக்கு வழக்கமாகிவிட்டது" என்றார்.
மேலும், "அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். இருப்பினும், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
பேட்டி- ஜி.கே.வாசன்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.