பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால் திருச்சி மலைவாசல், சிங்காரத்தோப்பு, சின்னக்கடை வீதி, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மூன்று நாட்கள் இயங்காது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சியின் சுற்றுவட்டார மாவட்டங்களின் பிரதான கடைவீதி பகுதிகளாக, திருச்சி மலைவாசல், சிங்காரத்தோப்பு, சின்னக்கடை வீதி, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகள் விளங்குகின்றன.
இங்கு ஏராளமான பிரபல நிறுவனங்கள் பல்வேறு வகையான வணிகங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், இப்பகுதி முழுவதும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்ததாக காணப்படும்.
இந்நிலையில், இந்தப் பகுதிகளில் பிஎஸ்என்எல் மற்றும் மின்சார கேபிள்கள் செல்வதால், பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பணிகள் அறவே நடக்காமல் இருந்தது.
எனவே, இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக, திருச்சி மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் குமரேசன், மாநகராட்சிப் பொறியாளர் சிவபாதம் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலச் செயலாளர் கோவிந்தராஜூலு உள்பட பல்வேறு வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'மாநகராட்சி சார்பில், 'ஒரு வாரம் தொடர்ச்சியாக பணிகள் நடக்கும். எனவே, அப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால், ஒரு வாரம் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்க வணிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, 'மூன்று நாட்கள் கடைகளை மூடுகிறோம். அதற்குள் பணிகளை முழுமையாக முடித்து தாருங்கள்' என்று கூறினர்.
Also Read : வேங்கை வயல் விவகாரம்... சிபிசிஐடியை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
அதை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம், 'மலைவாசல், சின்னக்கடை வீதி, சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் சாலைகளை மூடி, பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், வரும், 6, 7, 8 ஆகிய தேதிகளில் அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படும். பணிகள் முடிவடைந்த பின்பு, 9ம் தேதி முதல் வழக்கம் போல அனைத்து வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும்' என்று மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : விஜயகோபால்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business