தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (டிசம்பர் 28) திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பதாகவே தமிழக அரசு பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை சோதனை செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக சீனா, ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களை ரேண்டம் முறையில் இரண்டு சதவீதம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 24 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஜப்பான், சீனா,ஹாங்காங் தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் 100% பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
தற்போது நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் 22,969 வந்துள்ளனர். அதில் 533 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
நேற்று சீனாவில் இருந்து தென்கொரியா இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருடைய இரத்த மாதிரிகள் இன்று சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு அது எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து ஆராயப்படுகிறது. அதில் பிஎப்7 தான் பிரபல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் கம்போடியாவில் இருந்து ஒருவரும் , துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர். மற்றொருவர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பன்னாட்டு நிலையங்களில் குறிப்பாக இன்று திருச்சியில் அதற்கான சோதனை நடைபெறுவதை ஆய்வு செய்தோம். உடல் வெப்ப அளவை கண்காணிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
உலகத்தில் புதிய கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவது. அதை ஒரு தொழிலாகவே பலர் செய்து செய்து வருக்கின்றனர். இதுபோன்ற கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நேற்று சென்னையில் பிளட் ஆர்ட் நிறுவனங்களை சோதனை செய்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அன்பு, நட்பு, காதல் மூன்றையும் பகிர்ந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது. அதற்கு ரத்த ஓவியங்கள் தான் அதற்கான வழி என்று கூறுவது தவறு.
3 லட்சம் தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பு உள்ளது. 60 வயது தாண்டியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க சொல்லப்பட்டுள்ளது. மூக்கு வலியாக செலுத்தப்படும் மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கிறது. எனவே ஒன்றிய அரசருக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் ஆனது மற்ற நாடுகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை விட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை முழுமையாக கூற முடியாது.
இருப்பினும் தமிழகம் தடுப்பூசிகளை முறையாக செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உள்ள மாநிலமாக உள்ளது என்று கூறினார்.
செய்தியாளர்: சே.கோவிந்தராஜ்.திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Ma subramanian, Trichy