ஒரே வீட்டு உபயோக வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை அனைத்தும் ஒரே இணைப்பாக இணைக்க வேண்டும்' என்ற ரீதியில் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி மின்வாரிய அதிகாரி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் வீட்டு மின்இணைப்புகள், 2 கோடியே 40 லட்சமும், கைத்தறி, விசைத்தறி, குடிசை, விவசாய மின்இணைப்புகள் என, 2 கோடியே 66 லட்சத்து 87 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன.
வீட்டு மின் இணைப்புகளுக்கு முதல், 100 யூனிட் இலவசமும், 101 யூனிட்டுகளுக்கு மேல், பல்வேறு முறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை, '1ஏ' பிரிவில் அடங்கும்.
பொது பயன்பாட்டுக்கு (கமர்சியல்) யூனிட் ஒன்றுக்கு, 8 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை, '1டி' பிரிவில் அடங்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில், கூட்டரங்கம், குடிநீர் குழாய் மோட்டார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பொது பயன்பாட்டு மின் இணைப்புகள், வீட்டு உபயோக மின் இணைப்பாக (1ஏ) இருந்து வந்தது.
இதனால், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்று வந்தனர். தமிழகத்தில் மின் கட்டணம் கடந்தாண்டு செப்டம்பர் முதல், 34 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டது. அதனையடுத்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் பொதுப் பயன்பாட்டு மின் இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவையனைத்தும் '1ஏ' பிரிவில் இருந்து '1டி' பிரிவாக மின்வாரியம் மாற்றியது.
அதைப்போலவே, பொது வீட்டு உபயோகம், தண்ணீர், விளக்கு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள் இப்போது '1ஏ' பிரிவில் இருந்து '1டி' பிரிவாக தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.
சர்ச்சை நோட்டீஸ்:
இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உதவி மின் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுமக்களுக்கு அனுப்பிய நோட்டீஸில், 'வீட்டு உபயோக வளாகத்தில் ஒன்றுக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருப்பது மின்வாரிய ஊழியர்களால் கண்டறியப்பட்டால், அதனை ஒரே இணைப்பாக இணைக்க வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
'ஒரே வீட்டில் 1ஏ, 1டி என்று பிரித்து இணைப்புகள் பெற்றிருந்தாலும், அவர்களும் ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும்' என்று அர்த்தத்தில் அந்த நோட்டீஸ் இருந்ததால் மக்களிடையே கடும் குழப்பம் ஏற்பட்டது.
மேலும், குடியிருப்பில், வீட்டில் வேறு நபர்கள் வசிக்கிறார்களா? என்பதற்கான ஆதாரமாக தனி ரேஷன் கார்டு அல்லது வாடகைப் பத்திரம் மற்றும் குத்தகை ஒப்பந்தம் பதிவு செய்திருந்தால் அதனை இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு சமர்ப்பித்தால், அவர்களும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பெறலாம். ஆனால், இவை குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் சர்சையும் ஏற்பட்டது.
சமூக வலைத்தளங்களில் இந்த நோட்டீஸ் வைரலானது. 'இதற்காகத்தான் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்களா?' என்று பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.
இதை, 'மின்வாரிய அதிகாரியின் தன்னிச்சையான செயல்பாடு' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், குளறுபடியான நோட்டீஸ் அனுப்பிய திருவெறும்பூர் உதவி மின்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar, EB Bill, Electricity bill, Local News, Senthil Balaji, Trichy