Home /News /trichy /

‘வீர் சக்ரா’ விருதுப் பெற்ற தமிழகத்தின் முதல் ராணுவ வீரர் மதலைமுத்து - சொந்த ஊரில் சிலை அமைக்க குடும்பத்தினர் கோரிக்கை

‘வீர் சக்ரா’ விருதுப் பெற்ற தமிழகத்தின் முதல் ராணுவ வீரர் மதலைமுத்து - சொந்த ஊரில் சிலை அமைக்க குடும்பத்தினர் கோரிக்கை

ராணுவ வீரர் மதலைமுத்து

ராணுவ வீரர் மதலைமுத்து

Exclusive : இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, இந்திய ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி வீர தீர செயல் புரிந்து எதிரிகளின் உத்தியை முறியடித்து ‘வீர் சக்ரா’ விருதுப் பெற்ற தமிழகத்தின் முதல் ராணுவ வீரர் மதலைமுத்துவுக்கு சொந்த ஊரில் சிலை அமைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கடந்த, 1965ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா- பாகிஸ்தான் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். இந்தியாவின் முக்கிய விமானப்படை தளமான பதான்கோட்டில் போர் உக்கிரமடைந்திருந்தது. பதான்கோட்டை பணிய வைக்க பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில், மாற்றுவழி ஒன்று கிடைத்ததென துள்ளிக் குதித்தனர் பாகிஸ்தான் அதிகாரிகள்.

அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட, தற்போதைய மேற்கு வங்க மாநில எல்லையில் அமைந்திருந்த கலாய் குண்டா விமானப்படைத் தளத்தை தாக்கி அழிப்பதே அவர்களது வியூகம். அங்குதான் (அப்போதைய இந்திய மதிப்பில்) 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், வெடிமருந்துகள் நிரம்பி இருந்தன. 700 ராணுவ வீரர்களும் முகாமிட்டிருந்தனர். ‘ஒற்றை இலக்கில் மொத்த இந்தியாவும் காலி’ என்ற இறுமாப்புடன், அமெரிக்காவின் ‘எஃப் 86 சாபர்கேட்’ என்ற அதிநவீன நாசக்கார விமானத்தை கலாய் குண்டாவிற்கு அனுப்பி வைத்தனர்.

தனி ஒருவன்

செப்டம்பர், 7ம் தேதி அதிகாலை, 4.30 மணிக்கு சாபர்கேட், தனது தீ நாக்குகளுடன் கலாய் குண்டா விமானப்படை தளத்தை நோக்கி நுழைந்தது. மொத்தம், 7 வான்வழித் தாக்குதல் தற்காப்பு பிரிவில் இருந்த வீரர்கள் திகைத்து நிற்க, 4வது பிரிவை சேர்ந்த ஒரு இளைஞர், தன் தலைக்கு மேலே பறந்த ஒரு சாபர்கேட் விமானத்தை சர்வ சாதாரணமாக சுட்டு வீழ்த்தினார்.

கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் இந்திய எல்லைக்குள் விழுந்து நொறுங்கியது. அடுத்த, 2 நிமிடத்தில் வந்த மற்றொரு சாபர்கேட் விமானத்தையும் குறிவைத்து சுட்டு வீழ்த்தினார். இந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து நொறுங்கியது. இந்தியா- பாகிஸ்தான் போரின் முடிவையையே மாற்றி அமைத்தது இந்த இளைஞரின் வீரத்தீர செயல்.

வீரத் தமிழன்

இந்திய- பாகிஸ்தான் போரில் நமது எல்லைச்சாமியாக விளங்கிய அந்த இளைஞர் தமிழகத்தை சேர்ந்த மதலைமுத்து. இந்த துல்லிய தாக்குதல் மூலம், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்று சாதனை படைத்த முதல் தமிழர் என்ற பெருமையையும் பெற்றார்.

மதலைமுத்து


உழவர் மகன்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் என்ற குக்கிராமத்தில், மங்கலம்- உத்தரியமேரி தம்பதிக்கு மகனாக 1927ம் ஆண்டில் பிறந்த மதலைமுத்து, பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல், சிறுவயதிலேயே ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். குடும்ப வறுமை காரணமாக ரயில்வேயில் தினக்கூலிக்கு கலாசி வேலை செய்து வந்தார். ஆனால் அவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை மிகுந்திருந்தது.

அப்போது, ராணுவத்துக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்ததை அறிந்து, 1951ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 24. மதலைமுத்துவிற்கு இருந்த தேசத்தின் மீதான ஆழ்ந்த பற்று, கடுமையான பயிற்சிகளை சர்வசாதாரணமாக கடக்க உதவியது. 1962ம் ஆண்டில் நடந்த இந்தியா- சீனா போர் இவரது திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது.

இவரது திறமையை கண்ட ராணுவ அதிகாரிகள், இவரை தரைப்படையில் இருந்து, வான் வழித் தாக்குதல் தற்காப்பு பிரிவுக்கு மாற்றினர். அதைத் தொடர்ந்து, '28 AD ரெஜிமெண்டில்' மதலைமுத்து இணைந்தார். 1965ம் ஆண்டு நடந்த இந்தியா -பாகிஸ்தான் போரில், 'ஆபரேஷன் ரிடில்' என்ற பெயரிட்ட தாக்குதலில் பாகிஸ்தான் விமானங்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தினார். ‘வீர் சக்ரா’ விருதுப் பெற்ற மதலைமுத்து ராணுவத்தில், 17 ஆண்டுகள் பணியாற்றி விட்டு, 1968ல் ஓய்வு பெற்றார். பின்னர் 1981ல் மரணமடைந்தார்.

‘வீர் சக்ரா’ விருது


நாடே கொண்டாடும் வீரர்

மதலைமுத்துவின் பெருமையை போற்றும் வகையில், பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் அவரது பெயரில் நினைவு வளைவு, வணிகவளாகம், அருங்காட்சியகத்தில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலம் கோபால்பூரில் சிலை, பங்களாதேஷ் எல்லையில் கலாய் குண்டா விமானப் படைத் தளத்தில் கல்வெட்டு மற்றும், முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் லால்குடி ரயில் நிலையத்தில், கடந்த, 1966ம் ஆண்டில் 'பெருமை சின்னம்' என்ற பெயரிலான கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

Must Read : சென்னை உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

இந்திய ராணுவத்தில் இன்றளவும் ராணுவ வீரர்களின் வீரத்தீர செயல்களுக்கு முன்னுதாரணமாக மதலைமுத்து அடையாளம் காட்டப்பட்டு வருகிறார்.

சொந்த ஊரில் சோகம்

ஆனால், அவர் பிறந்து வளர்ந்த லால்குடியில் அவருக்கு ஒரு போர் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது.

மதலைமுத்து குடும்பத்தினர்


இதுகுறித்து மதலை முத்துவின் மகன் ஜான் மதலைமுத்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எனது தந்தை ராணுவத்தில் உயரிய விருதான வீர் சக்ரா விருதை கடந்த, 1965ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால் பெற்ற முதல் தமிழர்.

இந்திய ராணுவம் இவரது பெருமையை போற்றி புகழும் நிலையில், வீரத் திருமகனாக திகழ்ந்த எனது தந்தையை நினைவு கூறும் வகையிலும், ராணுவத்தின் மீது எங்களது கிராமப்புற இளைஞர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையிலும், திருச்சி லால்குடி ரவுண்டானாவில் அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய ஒரு போர் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.

முதல்வருக்கு கோரிக்கை

இதற்காக, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேல், மனுமேல் மனு போட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த, 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, லால்குடியில் போர் சின்னம் அமைக்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், 2006ம் ஆண்டிற்கு பிறகு மட்டும், திருச்சியில், 9 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் அந்த சிலைகளை திறந்தனர் என்று தெரியவில்லை. அவற்றை அகற்ற வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கை அல்ல. ஆனால், அதே முறையில் எனது தந்தைக்கும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

எனவே, 75வது சுதந்திர பெருவிழா கொண்டாடப்படும் இந்த வேளையில், திருச்சி லால்குடி ரவுண்டானாவில் எனது தந்தைக்கு போர் நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Independence day, Indian army, Trichy

அடுத்த செய்தி