Trichy Crime Time | திருச்சி அருகே நாலரை சவரன் நகைக்காக, மூதாட்டி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தாயனூர் சுல்லாமணி கரையை சேர்ந்தவர் மலைக்கொழுந்தன். அவருக்கு வயது 72. விவசாயியான இவருக்கு அக்கம்மாள்(65) என்ற மனைவியும், சிறும்பாயி, அய்யினாள் என்ற மகள்களும், வைரமணி என்ற மகனும் உள்ளனர்.
இரண்டு மகள்களுக்கும் உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மகனும் திருமணமாகி உள்ளூரிலேயே வசிக்கிறார். கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இருவரும் ஆடு, மாடுகள் வளர்த்து வருவதால், அவற்றிற்காக, அக்கம்மாள் அருகில் உள்ள வயல்களுக்கு சென்று புற்கள் அறுத்து வருவது வழக்கம்.
வழக்கம் போலவே, நேற்று மாலை வீட்டிற்கு அருகில் உள்ள சோளக்காட்டிற்கு அக்கம்மாள் புல் அறுக்க சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடைய கணவன் மற்றும் மகன், மகள்கள் நேற்று மாலையில் இருந்து இரவு வரை தேடியும் அக்கம்மாள் எங்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று காலை அக்காமாளின் பேரன் தினேஷ்குமார் பாட்டியை தேடிச் சென்றார். வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணிவேல் என்பவரது சோளக்காட்டுக்குள் தன்னுடைய பாட்டி பிணமாகக் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்டு வந்து பார்த்தபோது, அக்கம்மாள் கழுத்து அறுப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த, 4 சவரன் செயின் மற்றும் அரை சவரன் தோடுகள் பறிக்கப்பட்டிருந்ததன.
மூக்குத்தியை கழற்ற முடியாததால், கொலையாளிகள் அதை அப்படியே விட்டு விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த, திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.