ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பறிபோன சிறுவனின் பார்வை... அரசின் உதவியை எதிர்நோக்கும் தாய்...

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பறிபோன சிறுவனின் பார்வை... அரசின் உதவியை எதிர்நோக்கும் தாய்...

திருச்சி

திருச்சி

Tiruchirappalli | ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் 13 வயது சிறுவனின் பார்வை போய் உள்ளது. அவனுக்கு மீண்டும் பார்வை கிடைக்க உதவ வேண்டும் என்று சிறுவனின் தாய் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 13 வயது சிறுவனுக்கு இடது கண் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதனால் பார்வை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார் எனவும் கண் பார்வை பெற்று மீண்டும் பள்ளிக்கு போக உதவுங்கள் எனவும் முதல்வரிடம் சிறுவனின் தாயார் கண்ணீர் மல்க உதவி கேட்டுள்ளார். 

  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி மேலரண் சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடை முன்பாக இருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து உத்தர பிரதேசம் பகுதியை சேர்ந்த அனார்சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்துள்ளார்.

  அப்போது கரூர் சின்ன தாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்கிற மாட்டு ரவி(35) என்ற நபரை சிறிது நேரம் பார்த்துக்க சொல்லிவிட்டு தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்று உள்ளார். அப்பொழுது திடீரென பெரும் சத்தத்துடன் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டது. ரவி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

  ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த கட்டடங்களின் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  அனார் சிங்கை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 13 வயதாக ஜீவானந்தம் திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

  அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு இடது கண் பகுதி முழுவதுமாக காயம் அடைந்து பார்வை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறார். மேலும் ஜீவானந்தத்தின் சிறுகுடல் முழுவதுமாக பாதிக்கப்பட்டு தற்பொழுது பெருங்குடல் பகுதியை வெளியே வைத்து ஒட்டி அதன் மூலம் மலம் கழிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மிகுந்த மன வேதனையுடன் தொடர்ந்து மிகுந்த சிரமத்துடன் சிறுவன் இருந்து வருகிறான்.

  இது குறித்து சிறுவனின் தாய் சித்ரா கூறுகையில்,  ”பலூன் வெடி விபத்தில் காயமடைந்த எனது மகன் ஜீவானந்தம் கடந்த 25 நாட்களாக திருச்சி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றான். அவனுக்கு கண் பகுதியில் அதிகமான காயம் ஏற்பட்டதன் காரணமாக பார்வை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

  இதற்கு மேல் பார்வை வரவேண்டும் என்றால் உயர் சிகிச்சை செய்ய சென்னையில் உள்ள மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை மூலம் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே கண் பார்வை வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  எனது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வறுமையின் காரணமாகவும் என்னால் தனியார் மருத்துவமனைக்கு எல்லாம் சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாத சூழல் உள்ளது.

  மேலும் பொது இடத்தில் ஒரு விபத்து நடந்து 25 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை யாரும் எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை.

  என் பையன் ரொம்ப கஷ்டப்படுறான். அவனோட வாழ்க்கை இதோட முடிஞ்சிடுமா என்று ரொம்ப பயமா இருக்கு. என் பையன காப்பாத்துங்க அவனுக்கு மீண்டும்  கண் பார்வை கிடைக்க  உதவுங்கள்” என தமிழக முதலமைச்சருக்கு   கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

  செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CM MK Stalin, Gas cylinder blast, Trichy