நம் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அதற்கான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு எவ்வளவு உட்கொள்கிறோமோ அந்த அளவு உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதும் அவசியம். முக்கியமாக நீர்ம வெளியேற்றம் நமது உடலின் சூட்டை நிலைப்படுத்தும் . அந்த சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் நாள் தான் இன்று.
இண்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜி (ISN) மற்றும் கிட்னி ஃபவுண்டேஷன்களின் சர்வதேச கூட்டமைப்பு - உலக சிறுநீரகக் கூட்டணி (IFKF-WKA) இணைந்து உலக சிறுநீரக தினம் எனும் உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது.
சிறுநீரகத்தின் முக்கியத்துவம்
சிறுநீரகங்கள் அடிவயிற்றில் அமைந்துள்ள இரண்டு பீன் வடிவ உறுப்புகள். அவை உடலில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை அகற்றுதல், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்தல் மற்றும் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறுநீரக நோய் உலகளவில் ஒரு முக்கிய சுகாதார பிரச்சினையாக இருந்து வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான இறப்புகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் சிறுநீரக நோய் இருப்பதே வெளியில் தெரிவதில்லை. காலம் கடந்துவிட்டால், கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
வரலாறு
"உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா?" என்ற தலைப்பில் முதல் உலக சிறுநீரக தினம் 2006 இல் கொண்டாடப்பட்டது. அன்றைய தேதியில் சுமார் 66 நாடுகள் அனுசரித்த இந்த தினத்தை தற்போது பெரும்பாலான உலக நாடுகள் கடைபிடிக்கின்றன.
அப்போதிருந்து, நாள்பட்ட சிறுநீரக நோய் (சிகேடி), நீரிழிவு நோயின் தாக்கம், இரத்த அழுத்தம் மற்றும் இந்த உறுப்புகளில் ஏற்படும் பிற சுகாதார பிரச்சனைகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிறுநீரக ஆரோக்கியம் போன்ற தலைப்புகளை உள்ளடக்கி ஆண்டுதோறும் சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது.
குறிக்கோள்கள்
உலக சிறுநீரக தினம் பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. இது முதன்மையாக சிறுநீரகங்களின் முக்கியத்துவம் மற்றும் உடலில் அவற்றின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மற்றொரு குறிக்கோள், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சிறுநீரக செயலிழப்பு போன்ற சிக்கல்களைத் தடுக்க சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். நாள்பட்ட சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தத்துடன் வலுவாக தொடர்புடையது என்பதை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
மற்றொரு நோக்கம், நாள்பட்ட சிறுநீரக நோய் ஆபத்தைக் கண்டறிந்து குறைப்பதில் மருத்துவ நிபுணர்கள், உள்ளூர் மற்றும் தேசிய சுகாதார அதிகாரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் சிறுநீரக பரிசோதனையில் முதலீடு செய்ய அரசாங்கங்களை ஊக்குவிக்கிறது.
இந்த நாளில் ...
சுகாதார பரிசோதனைகள், கல்வித் திட்டங்கள் மற்றும் நிதி திரட்டும் நிகழ்வுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை இந்த நாளில் மேற்கொள்கின்றனர். சுகாதார வல்லுநர்கள், நோயாளி குழுக்கள் மற்றும் தனிநபர்கள் ஒன்றிணைந்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறுநீரக நோயைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க இது ஒரு வாய்ப்பாகும்.
2023 கருப்பொருள்;
2023 உலக சிறுநீரக தினத்தின் கருப்பொருள் “அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் – எதிர்பாராதவற்றுக்குத் தயாராகுதல், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவு தருதல் ” Kidney Health for All - Preparing for the unexpected, supporting the vulnerable என்பதாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.