கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது. சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பல மூடப்பட்டு வரும் சூழலில் தெலங்கானாவைச் சேர்ந்த Self Help Group (SHG) என்ற பெண்கள் குழு மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டு 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பெண்கள், இந்த இக்கட்டான காலக்கட்டத்திலும் தங்கள் குடும்பங்களை மாஸ்க் தயாரித்து காப்பாற்றி வருகின்றனர்.
நாராயணன்பேட் மாவட்டத்தைச் ( முன்னர் மகபூப் நகர் மாவட்டம்) சேர்ந்த பெண்கள் குழு, சவாலான கொரோனா காலத்தை தங்களுக்கு சாதகமான நேரமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.
மாஸ்க் தயாரிப்பிற்காக, நாராயணன்பேட் மாவட்ட கலெக்டர் ஹரிசந்தனா அப்பகுதி பெண்கள் குழுவுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதனை மூலதனமாகக் கொண்டு, மாவட்ட ஆட்சியரின் அறிவுரை மற்றும் ஊரக வளர்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டனர். சுமார் 6 லட்சம் மாஸ்க்குகளை தயாரித்த அந்தக் குழு 25 முதல் 30 லட்சம் ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டியுள்ளனர்.
SGH குழுவில் சுமார் 3 ஆயிரம் பெண்கள்
மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வகைகள், ரகங்கள் மற்றும் சந்தையில் அதிக விற்பனையாகும் மாஸ்க்குள் என அனைத்து ரக மாஸ்க்குகளையும் உற்பத்தி செய்கின்றனர். இக்காட், போச்சம்பள்ளி சில்க், நாராயணன் பேட் நூல் மாஸ்க், 100 விழுக்காடு சில்க் மாஸ்க் உள்ளிட்டவை அவர்கள் தயாரிக்கும் முக்கிய மாஸ்க் வகைகளாகும். இதுமட்டுமல்லாது ஆயுர்வேத மாஸ்க்குகளையும் தயாரிக்கின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் அவர்கள் விளம்பரம் செய்வதால், இந்த பெண்கள் குழுவுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர்.
Also read... நாட்டை உலுக்கும் கொரோனா இரண்டாம் அலை - கவலையுடன் எதிர்கொள்ளும் இந்தியர்கள்... ஆய்வில் தகவல்!
அரசு நிறுவனங்கள், ஐ.டி கம்பெனிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மிகப்பெரிய ஆர்டர்களை SHG குழுவுக்கு அளிக்கின்றனர். ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம், எப்.ஐ.சி.சி.ஐ, ராம்கி நிறுவனங்களும், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, தபூ, பராகான் உள்ளிட்டோரும் இந்த பெண்கள் குழுவிடம் மாஸ்க்குகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். சாப்ட்வேர் கம்பெனியான டெலாய்ட் சுமார் 63, 000 மாஸ்க்குகளை ஆர்டர் கொடுத்தது. தற்போது 2வது அலை கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் SHG பெண்கள் குழுவுக்கு மாஸ்க் ஆர்டர்கள் மேலும் குவியத் தொடங்கியுள்ளன. இதனால், இரவு பகலாக அவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மாஸ்க் மட்டுமின்றி வீட்டு தயாரிப்பு பொருட்களான ஊறுகாய், பனை பொருட்கள் ஆகியவைகளும் பெண்கள் குழுவினர் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வெற்றியை தொடர்ந்து பெண்களுக்கு 45 லட்சம் ரூபாய் மதிப்பில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து SHG பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.