ஜெர்மனி நாட்டில் இருக்கும் மன்ஹெய்ம் (Mannheim ) என்ற நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
ஏனென்றால் குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மூதாட்டி, தன்னுடன் ஒரே அறையில் தங்கி சிகிச்சைபெற்று வந்த மற்றொரு மூதாட்டியை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த வாரத்தில் ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான மன்ஹெய்மில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த மூதாட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
எதற்காக அவர் இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதை இங்கே பார்க்கலாம். குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூதாட்டிக்கு 72 வயது. இவர் சிகிச்சை பெற்று வந்த ரூமில் 79 வயதான மற்றொரு மூதாட்டி ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த மூதாட்டிக்கு இருந்த உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவருக்கு வென்டிலேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. நோயாளியின் சுவாச செயல்முறையை ஆதரிக்கும் அல்லது நுரையீரலுக்குள் காற்றை செலுத்தும் டிவைஸ் தான் வென்டிலேட்டர். பொதுவாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் தேவைப்படலாம்.
அந்த வகையில் அந்த 79 வயதான மூதாட்டிக்கு உடல்நிலை கோளாறு தீவிரமாக இருந்ததால் வென்ட்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சக நோயாளியாக அருகில் இருந்த 72 வயதான மூதாட்டிக்கு அந்த வென்டிலேட்டர் டிவைஸ் எழுப்பிய சத்தம் மிகவும் எரிச்சலூட்டி உள்ளது. தான் ஓய்வு எடுக்க முடியாமல் தொந்தரவாக இருக்கும் வென்டிலேட்டர் டிவைஸின் சத்தத்தை தடுக்க அந்த டிவைஸை ஆஃப் செய்துள்ளார். பின்னர் ரவுண்ட்ஸ் வந்த மருத்துவமனை ஊழியர்கள் 79 வயதான மூதாட்டிக்கு கொடுக்கப்பட்ட வென்டிலேட்டர் சப்போர்ட் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மீண்டும் ஆன் செய்துள்ளனர்.
Also Read : 9 இளம்பெண்களை திருமணம் செய்தவருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!
சக நோயாளியாக அதே ரூமில் தங்கியிருக்கும் 72 வயதான மூதாட்டி தான் இதற்கு காரணம் என்பதை கண்டறிந்த ஊழியர்கள், 79 வயது மூதாட்டியின் உடல் சீராக இருப்பதற்கு அவருக்கு வென்டிலேட்டர் மெஷின் மிகவும் முக்கியம் என்று பொறுமையாக எடுத்து கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் வென்டிலேட்டர் மெஷின் எழுப்பிய சத்தத்தால் மீண்டும் கோபமுற்ற அந்த 72 வயதான மூதாட்டி அன்று இரவு 8 மணியளவில் மீண்டும் சக நோயாளியின் வென்டிலேட்டர் மெஷினை ஆஃப் செய்துள்ளார்.
இதனை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் குற்றச்சாட்டப்பட்டு, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மூதாட்டி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வென்டிலேட்டர் மெஷினை ஆஃப் செய்ததால் சிறிது நேரம் உடல்நலம் பாதிக்கப்பட்ட 79 வயதான மூதாட்டியின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றாலும், இன்னும் தீவிர சிகிச்சை தேவை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.