கொரோனாவினால் இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வரும் செய்திகள் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இளம்பெண் ஒருவர் கொரோனா வார்டில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பாடல் கேட்டு மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டினர்.
இந்த வீடியோவை மருத்துவர் மோனிகா லங்கே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இந்த வீடியோவில் இருப்பவருக்கு 30 வயது தான். அவருக்கு ஐசியூ பெட் கிடைக்கவில்லை. ஆனால் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மிகவும் தைரியமான பெண். என்னிடம் பாடல்கள் கேட்க அனுமதி கேட்டார். நான் அனுமதித்தேன். இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், நம்பிக்கையை எப்பொழுதும் இழக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோ ட்விட்டரில் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவர் மோனிகா, அந்தப் பெண்ணுக்கு ஐசியூ பெட் கிடைத்ததாகவும், ஆனால் அந்த பெண்ணின் உடல் நிலை சீராக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரு குழந்தை இந்த பெண்ணுக்காக காத்திருப்பதாகவும் தயவு செய்து வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
She got the ICU bed but the condition is not stable. Please pray for brave girl. Sometimes I feel so helpless. It's all in the hands of almighty what we plan what we think is not in our hands. A little kid is waiting for her at home. Please pray. https://t.co/zfpWEt5dYm
— Dr.Monika Langeh🇮🇳 (@drmonika_langeh) May 9, 2021
இந்நிலையில் நேற்று அந்தப் பெண்குறித்து ட்வீட் செய்திருந்த மருத்துவர் மோனிகா, நாம் தைரியமான பெண்ணை இழந்துவிட்டோம். அந்தப் பெண்ணின் இழப்பை அவரது குடும்பத்தாரும், குழந்தையும் தாங்கிக்கொள்ள வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டார். இந்த செய்தி நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நம்பிக்கையுடன் இருந்த பெண் தற்போது இல்லை என்பது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.
கடந்த வாரம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு ஒரு வாரத்தில் 81 அழைப்புகள் வந்துள்ளது. அதில் அறுபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்தக் கொரோனாவால் தனது பெற்றோர்களை இழந்த குழந்தைகளிடமிருந்து வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உறவினர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மருத்துவமனை முன்பும் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான உயிர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இளைஞர் ஒருவர் தனது உறவினரின் இறப்பிற்கு இடுகாட்டுக்கு சென்ற போது, அங்கே பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து, அதனை வீடியோவாகத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒரு இடுகாட்டுக்கு முன்பு மட்டுமே 10க்கும் மேற்பட்ட உடல்கள் நல்லடக்கத்திற்கு காத்திருப்பது கொரோனாவின் கோரமுகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒரே நாளில் ஒரு ஊரில் மட்டும் இந்த நிலைமை என்றால் தமிழகத்தின் நிலையை யோசித்து பார்க்கக் கூடப் பயமாக இருக்கிறது. அரசு ஒரு பக்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus, Trending