Home /News /trend /

மெர்சல் அரசன் TTF வாசன்.. அரசியல், சினி பிரபலங்களையே பொறாமைப்பட வைத்த 2K கிட்ஸ்..!!

மெர்சல் அரசன் TTF வாசன்.. அரசியல், சினி பிரபலங்களையே பொறாமைப்பட வைத்த 2K கிட்ஸ்..!!

 TTF வாசன்..

TTF வாசன்..

TTF Vasan Youtuber : பார்ப்பதற்குத் தன்னைப் போல இருக்கும் ஒருவன், விலையுயர்ந்த பைக், பெண் தோழிகள், நெடும்பயணங்கள், யூடியுப் சம்பாத்தியம் என தான் கனவு காணும் வாழ்வை வாழ்கிறான். அவன் நம் நண்பனைப் போல் இருக்கிறான் என்பதே வாசன் போன்ற இன்பிலுயன்சர்களின் மிகப் பெரிய பலமாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  டிடிஎஃப்(TTF) வாசன் என்ற இந்த பெயர் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு அவர் யார் என்று தெரியவில்லை என்றாலோ, டிடிஎஃப் பெயரைக் கேட்டால் எரிச்சல் அடைந்தாலோ ‘பூமர்’ என்ற பட்டம் வழங்கப்படலாம்.

  டிடிஎஃப் வாசன் என்ற இந்த பெயர் பலரை அறியாமையில் உழல்பவராகவும், வயது முதிர்ந்தவர்களாகவும் உணர வைத்திருக்கிறது. ஏன்?

  யார் இந்த டிடிஎஃப் வாசன்?

  அடிப்படையில் வாசன் ஒரு யூடியுபர் மற்றும் டிராவலர். அவர் டிவின் திராட்டிலர்ஸ்’ (Twin Throttlers) என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரை கிட்டத்தட்ட 28 லட்சம் நபர்கள் யூடியுபில் பின் தொடர்கிறார்கள். தன்னை பின் தொடர்பவர்களை அவர் டிடிஎஃப் என அழைக்கிறார். அதாவது ‘டிவின் திராட்டிலர் ஃபேமிலி’.பைக்கில் நெடும்பயணம் செய்து அதை வீடியோவாக, விலாகாக (vlog) போடுவதே இந்த சேனலின் பிரதான பணி.

  தன் ரசிகர்களுடன் டிடிஎஃப் வாசன்.


  தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளுக்கு அவரது விலை உயர்ந்த பைக்கிலேயே டிராவல் செய்து அதை வீடியோவாக பதிவேற்றுகிறார். அவர் வைத்திருக்கும் பைக்கின் பெயர் கவாசக்கி z900 இந்த பைக்கின் குறைந்தபட்ச விலை 8 லட்ச ரூபாய். அவர் இந்த பைக்கை வாங்கும் வீடியோவே 10லட்சம் தடவை பார்க்கப்பட்டுள்ளது.

  ஏன் டிடிஎஃப் வாசன் திடீரென்று பேசப்படுகிறார்?

  கடந்த ஜூன் 30-ம் தேதி வாசன் தன் பிறந்தநாளை தன்னுடைய டிவின் திராட்டிலர் குடும்பத்தோடு கொண்டாடலாம் என முடிவெடுத்து கோவையில் ஒரு சந்திப்பை (Meet up) ஏற்பாடு செய்தார். அவரே எதிர்பார்க்காத வண்ணம் ஆயிரக்கணக்கானவர்கள் அந்த சந்திப்பிற்கு குழுமியிருந்தனர்.

  அவர் அந்த மீட்டப்பில் எடுத்த செல்பிதான் அவரை இன்று வைரலாக்கியுள்ளது. சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே இது போல் கூட்டம் கூடுவதைப் பார்த்த தமிழகம் இன்று ஒரு யூடியுபருக்கு கூடிய இந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளது. வாசன் எடுத்த அந்த செல்பி நெய்வேலியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் எடுத்த செல்பியுடன் ஒப்பிட்டு பல மீம்ஸுகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த மீடியாவும் வாசனைப் பற்றி பேசத்தொடங்கியுள்ளன.

  பூமர் அங்கிள் அண்ட் ஆண்டிஸ்:

  இந்த சந்திப்புக்குக் கூடிய கூட்டத்தில் பெரும்பாலும் 2000ல் பிறந்த 2கே கிட்ஸ் இருந்ததாகவும், அவர்கள் எல்லோரும் பொறுப்பற்றவர்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. பலர் இப்படி ஒரு தனி உலகம் சமூக வலைத்தளங்களில் இயங்குவதே தெரியாது என்ற ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

  டிடிஎஃப் பிறந்தநாள் சந்திப்பு.


  எல்லோரும் 2கே கிட்ஸுகளை திட்டிக்கொண்டிருக்க. இந்த மீட்டப்பிற்கு எதிராகப் பேசுவோருக்கெல்லாம் ‘பூமர்’ என்ற பட்டத்தை 2கே கிட்ஸ் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். 2கே கிட்ஸுகளின் உலகத்தில் அனுமதிக்கப்படாத பழக்கங்களைக் கொண்டிருந்தால், அவர்களின் உலகைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அவர்களை பூமர் என 2கே கிட்ஸ் அழைக்கின்றனர்.

  சினிமா நட்சத்திரங்களுக்கு சவால் விடும் இன்பிலுயன்சர்கள்:

  சமூக வலைத்தளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அதிக பாலோவர்ஸ்களை வைத்திருப்பவர்களுக்குப் பெயர் சோசியல் மீடியா இன்பிலுயன்சர்(Social Media Influencer). சோசியல் மீடியா பிரபலத்தையே இப்படி அழைக்கின்றனர். உலகம் முழுக்க சோசியல் மீடியா இன்பிலுயன்சர்கள் உள்ளனர்.

  உதாரணமாக இங்கு அதிகம் அறியப்பட்டுள்ள யூடியுபரான மதன் கவுரி ஒரு சோசியல் மீடியா இன்பிலுயன்ஸர். நீங்கள் யாரைத் தினமும் உங்கள் சமூக வலைதளத்தில் பின்பற்றுகிறீர்களோ அவர் உங்கள் சோசியல் மீடியா இன்பிலுயன்சர்.

  உலகம் முழுக்கவே சோசியல் மீடியா இன்பிலுயன்சர்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு நிகரான ரசிகர்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் பேசினால் பல கோடி நபர்களை அது சென்றடையும் என்ற மிகப் பெரிய சக்தி அவர்கள் கையில் உள்ளதால் அவர்களுக்கு நாம் மறுத்தாலும் முக்கியமான இடம் இச்சமூகத்தில் உருவாகியுள்ளது.

  டிடிஎஃப் வாசனை ஏன் இவர்களுக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது?

  பொதுவாக நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நடிகர்களாகட்டும், அரசியல் வாதிகளாகட்டும் அவர்கள் மக்கள் அண்ணாந்து பார்த்த காலகட்டத்தை சோசியல் மீடியாவின் வரவு இல்லாமல் ஆக்கியிருக்கிறது. பிரபலங்களுக்கும் பொது மக்களுக்குமான இடைவெளியை சமூக வலைத்தளங்கள் வெகுவாக குறைத்திருக்கின்றன.

  இதுவரை நட்சத்திரங்கள் என்றாலே அவர்களைப் பார்ப்பதே அரிதான ஒரு நிகழ்வாகத்தான் இருந்தது. ஆனால் 2கே கிட்ஸ்களின் கதாநாயகர்கள்( இன்பிலுயன்சர்கள்) மிக அருகில் இருக்கும் உணர்வை அவர்களுக்கு வழங்குகிறார்கள். அவர்கள் ஆதர்சமாக நினைக்கும் அந்த கதாநாயகன் அவர்களின் கேள்விகளுக்கு கமெண்டில் பதில் அளிக்கிறார். அவர்களுடன் அசராமல் நின்று செல்பி எடுத்துக்கொள்கிறார். லைவில் அவர்களின் பெயரை உச்சரிக்கிறார்.

  பிளாக் ஷீப் அவார்டுடன் வாசன்.


  இப்படி அந்த இன்பிலுயன்சர்  தன் பெயரைக் கோடிக்கணக்கானவர்கள் முன்னிலையில் சொல்கிறார் என்பதே வாசன் போன்றவர்களின் மீது 2கே கிட்ஸுகளுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

  இவையெல்லாவற்றையு விடப் பார்ப்பதற்குத் தன்னைப் போல இருக்கும் ஒருவன், விலையுயர்ந்த பைக், பெண் தோழிகள், நெடும்பயணங்கள், யூடியும் சம்பாத்தியம் என தான் கனவு காணும் வாழ்வை வாழ்கிறான். அவன் நம் நண்பனைப் போல் இருக்கிறான் என்பதே வாசன் போன்ற இன்பிலுயன்சர்களின் மிகப் பெரிய பலமாக உள்ளது. அதனால்தான் தொடக்கத்தில் சில குறிப்பிட்ட தலைப்புகளில் மட்டுமே வீடியோப் பதிவிடுபவர்கள் போகப்போக தன் தினசரிகளைக் கூட வீடியோவாக போடத் தொடங்குகிறார்கள்.

  வாசன் தன் ஃபாலோவர்களை டிடிஎஃப் என்று அழைப்பதே மிகப் பெரிய வணிக உத்தி. அவர் ஒவ்வொரு முறை ‘டிடிஎஃப்’ என அழைக்கும்போதும் அவர் தன்னையே அழைப்பதைப் போல் அவருடைய ஃபோலவர்கள் உணர்கிறார்கள்.

  இனி இன்புலியன்ஸர்களின் காலம்:

  இப்படிப் பல கோடி பேர்களிடம் ஒரு விஷயத்தை, செய்தியை, பொருளை அவர்களால் தன் வீடியோ மூலம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதாலேயே அவர்கள் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு தேர்ந்த ஊடகவியலாளரைப் போல் பயிற்சியோ பொறுப்போ உள்ளதா என்பதே இங்கே கேள்வி.

  போலிச் செய்திகள் பரவுவதற்கு இவர்கள் மிகப் பெரிய அளவில் காரணிகளாக உள்ளனர். இதை ஒழுங்கு செய்ய முடியாமல்தான் பேஸ்புக், யுடியூப் போன்ற நிறுவனங்களும், அரசுகளும் திணறி வருகின்றன.

  இன்புலியன்ஸர்களின் ஆதிக்கம் அதிகமாகிக்கொண்டிருப்பதால் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இவர்களை வரைமுறை செய்ய சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.

  லே லடாக்கில் வாசன்.


  இவர்கள் நினைத்தால் பல கோடி நபர்களுக்கு தங்கள் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதால், வணிக நிறுவனங்கள் இவர்களை தங்கள் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

  விராட் கோலிக்கு 205 மில்லியன் ஃபாலோவர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். அவர் ஒரு பொருளை புரமோட் செய்வதற்கு ஒரு போஸ்டுக்கு 5 கோடி வரை வாங்குகிறார்.
  இப்படி ஃபாலோவர்கள் எண்ணிக்கைக்குத் தகுந்தது போல் இன்பிலுயன்சர்கள் பணம் வசூலிக்கிறார்கள்.

  இப்படி அவர்கள் சந்தையின் செயல்பாட்டுச் சங்கிலியில் நுழைந்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கமே இனி நிறுவனங்கள் இன்பிலுயன்சர்களுக்கு அனுப்பும் இலவசப் பொருட்கள் 20000 ரூபாய்க்கு மேலானதாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

  கட்டுப்பாடுகளுக்குப் பெயர்போன சீனாவில் இன்பிலுயன்சர்கள் தன் போக்கிற்கு எதையும் பேசி விடக்கூடாது என்பதால் அவர்கள் சட்டப்பூர்வமாக உரிமம் வாங்கவேண்டும் எனக் கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

  டிடிஎஃப் வாசன் பொது சாலையில் வீலிங் செய்கிறார், அதிவேகமாக பைக்கை ஓட்டுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அவரைப் பார்த்து இளம் தலைமுறையினர் கெட்டுப்போக வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்படுகிறது. அவரோ தேர்தலில் நிற்கப்போவதாக வீடியோக்களில் பேசி வருகிறார்.

  டிடிஎஃப் வாசனைப் போல் பலர் வருங்காலங்களில் மேலெழுந்து வருவார்கள் என்பதே நிதர்சனம். அதை தடுக்கவே முடியாது. அவர்களைப் பார்த்து எரிச்சலாவதோ, குற்றம்சாட்டுவதோ எந்த விதமான பலன்களையும் அளிக்கப்போவதில்லை. இவர்களை வரைமுறைப்படுத்த என்ன செய்யவேண்டும், அவர்களின் பொறுப்பை உணர்த்துவதற்கான வழிமுறைகள் என்ன போன்ற விவாதங்களைத் தொடங்க வேண்டும். அரசாங்கத்திற்கும் மிகப் பெரிய பொறுப்பு இதில் ஏற்பட்டுள்ளது.
  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Instagram, Social media, Youtube

  அடுத்த செய்தி