Home /News /trend /

தாத்தாவின் 100-வது பிறந்த நாளன்று உறவினர்கள் செய்த தரமான சம்பவம்!

தாத்தாவின் 100-வது பிறந்த நாளன்று உறவினர்கள் செய்த தரமான சம்பவம்!

மனைவியை மீண்டும் திருமணம் செய்த தாத்தா

மனைவியை மீண்டும் திருமணம் செய்த தாத்தா

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விஸ்வநாத் சர்க்கார் என்ற நபர் இறைவனின் அருளால் 100ஆவது பிறந்தநாளை தனது 90 வயது மனைவியுடன் கொண்டாடி இருக்கிறார்.

பொதுவாக பிறந்தநாளில் பெரியவர்கள் நம்மை வாழ்த்தும் போது, “100 ஆயுசுக்கு நீ நல்லா இருக்கணும்யா’’ என்று சொல்வார்கள். ஆனால், யதார்த்த வாழ்வில் 100 வயசு வரை வாழும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியர்களின் சராசரி ஆயுள் 60 வயதில் தொடங்கி 80 வயதுக்குள் முடிந்து விடுகிறது. இதனையும் தாண்டி வெகுசில மக்கள் 90 வயதை கடந்து வாழ்கின்றனர். மிகவும் அரிதாக, சிலர் வயதில் செஞ்சுரி அடிக்கின்றனர். ஆனால், அப்படி 100 வயது வரை வாழ்ந்து விட்டாலும், அந்த வயது வரையிலும் உங்கள் வாழ்க்கைத் துணை நலமாக உங்களுடன் இணைந்து வாழ்வது கொஞ்சம் சாத்தியமில்லாத விஷயம்.

ஆனால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விஸ்வநாத் சர்க்கார் என்ற நபர் இறைவனின் அருளால் 100ஆவது பிறந்தநாளை தனது 90 வயது மனைவியுடன் கொண்டாடி இருக்கிறார். முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த இந்த தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். இந்த 6 பிள்ளைகள் மூலமாக தாத்தா, பாட்டிக்கு 23 பேரக்குழந்தைகளும், 10 கொள்ளு பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர்.

தாத்தாவின் 100ஆவது பிறந்தநாளை எப்படி சிறப்பாக கொண்டாடுவது என்பது குறித்து குடும்பத்தினர் ஆலோசனை செய்து, இறுதியாக தாத்தாவுக்கும், பாட்டிக்கும் மீண்டும் திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி கடந்த 16ஆம் தேதி இருவருக்கும் கோலாகலமாக திருமண விழா நடைபெற்றது. விஸ்வநாத் சர்க்கார் விவசாயத்தை தொழிலாக கொண்டவர். அவர் சுரோத்வானி என்ற தனது மனைவியை கடந்த 1953ஆம் ஆண்டில் கரம் பிடித்தார்.



 

இதையும் படியுங்கள் : பெண்ணின் வயிற்றிலிருந்து 47 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்!

சர்க்காரின் மருமகள்களில் ஒருவரான கீதா சர்க்கார் இதுகுறித்து கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் இதேபோன்றதொரு திருமண நிகழ்வை நான் பார்த்தேன். அதன் அடிப்படையில் நாங்களும் அதை செய்யலாம் என்று யோசித்தோம். இதுகுறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் ஆலோசித்தோம். அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்’’ என்று தெரிவித்தார்.



வாழ்க்கை சூழல் காரணமாக தாத்தாவின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகள் ஆகிய அனைவரும் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் தாத்தாவின் மறு திருமண விழாவுக்கு அவர்கள் அனைவரும் தவறாமல் ஆஜர் ஆகி விட்டனர்.

இதையும் படியுங்கள் : தெலங்கானாவில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த நடிகர் நாகார்ஜுனா

பேத்திகளும், கொள்ளு பேத்திகளும் இணைந்து மணப் பெண்ணான பாட்டியை அலங்காரம் செய்து திருமணத்திற்கு அழைத்து வந்தனர். அதேபோன்று, பேரன்கள் மற்றும் கொள்ளுப்பேரன்கள் இணைந்து தாத்தாவை அழைத்து வந்தனர். தாத்தா மிக கம்பீரமாக குதிரை சாரட் வண்டியில் வந்திறங்கினார். மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். திருமண விழா நடந்து முடிந்தவுடன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அறுசுவை உணவு விருந்து கோலாகலமாக நடைபெற்றது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Farmer, India

அடுத்த செய்தி