தமிழ்நாட்டின் மம்தா பானர்ஜியை மணம் புரியும் சோசலிசம்- வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

கம்யூனிச சித்தாந்தத்திற்கு தொடர்புடைய பெயர்களை மட்டுமே எங்கள் வருங்கால சந்ததியினருக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம்.

கம்யூனிச சித்தாந்தத்திற்கு தொடர்புடைய பெயர்களை மட்டுமே எங்கள் வருங்கால சந்ததியினருக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம்.

  • Share this:
சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை திருமண அழைப்பிதழ் ஒன்று ஈர்த்துள்ளது. அப்படி என்னதான் அந்த அழைப்பிதழில் ஸ்பெஷல் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

சேலம் மாவட்டத்தில் ஜூன் 13ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற உள்ளது. அந்த திருமணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், மக்களவை உறுப்பினர் சுப்பராயனும் வருகை தர உள்ளனர். இப்போது தெரிந்திருக்கும் அது ஒரு கட்சி சார்ந்த திருமணம் என்று. ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. அது என்னவென்றால், திருமண வாழ்க்கையை தொடங்க இருக்கும் மணமகனின் பெயர் சோசலிசம், அவரை மணம் புரிய இருக்கும் மணமகளின் பெயர் மம்தா பானர்ஜியாம்.. கேட்கவே புதிதாக இருக்கிறதல்லவா? பெயரின் சுவாரஸ்யம் இவர்களோடு முடியவில்லை. சோசலிசத்தின் குடும்பமே அதன் பெயர் வரலாற்றைக் கொண்டுள்ளது. சோசலிசத்திற்கு இரண்டு அண்ணன்களாம். மூத்தவரின் பெயர் கம்யூனிசம், இரண்டாவதாக பிறந்தவரின் பெயர் லெனினிசம். இதற்கிடையில், மார்க்சிசம் என்று ஒருவர் இருக்கிறார். அவர் யாரென்று பார்த்தால் கம்யூனிசத்தின் மகன் ஆவார். சோலியலிசத்தின் தந்தை ஏ.மோகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார்.

இதை தொடர்ந்து, பெயர்கள் குறித்து சோசலிசத்தின் தந்தை மோகனுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடலை இங்கே பதிவிடுகிறோம்...

‘எங்கள் குடும்பம் கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே சேலம் மாவட்டத்தின் காட்டூர் பகுதியில் கம்யூனிசம் பரவியது. எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், நான் 4வது தலைமுறை. சேலத்தில் நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வியட்நாம், செக்கோஸ்லோவாக்கியா, மாஸ்கோ, ரஷ்யா போன்ற பல தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தனித்துவமான பெயர்கள் காணப்படும். கம்யூனிச சித்தாந்தத்தை ஒட்டிய பெயர்களை எனது மகன்களுக்கு வைக்க காரணம் உள்ளது. 90களில் சோவியட் யூனியன் உடைந்தபோது கம்யூனிசம் என்ற கட்சி உலகில் இனி இருக்காது என்றார்கள். அதை செய்திகளில் பார்த்ததும் மனம் வருந்தினேன். என் மனைவி அப்போது கர்ப்பமாக இருந்ததால் எனது குழந்தைகளுக்கு கம்யூனிச சித்தாந்தத்துடன் கூடிய பெயரை சூட்ட முடிவு செய்தேன். எனவே, எனது முதல் பிள்ளைக்கு கம்யூனிசம் என்று பெயரிட்டேன். இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு வெனினிசம் என்றும், மூன்றாவது குழந்தைக்கு சோசலிசம் என்றும் பெயரிட்டோம். பெண் குழந்தை என்றால் அதற்கு மார்க்சியா என பெயரிட விரும்பினேன்’ என்றார்.



தனது மூன்று மகன்களும் கம்யூனிச சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்டவர்களா என்று கேட்டபோது, ‘சிறு வயதிலிருந்தே கட்சி மாநாடு, கட்சி கூட்டங்களில் பங்கேற்க நான் அவர்களை ஊக்குவித்தேன். எங்கு போராட்டம் என்றாலும் 5 வயது இருக்கும்போதே அவர்களை அழைத்துச் சென்றுவிடுவேன். வளர்ந்த பிறகும், பல போராட்டங்களில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். கட்சியிலும் மூவரும் உறுப்பினர்களாக உள்ளனர். 2009ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்க ரயிலில் சென்றனர். அதில் கம்யூனிசமும், லெனினிசமும் பங்கேற்றனர்’.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் இருக்கிறதா என கேட்டதற்கு, கம்யூனிசத்திற்கு மூன்று வயதாக இருந்தபோது, ​உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்போது, மருத்துவர் கம்யூனிசத்தின் பெயரை கேட்டதும் அனுமதி மறுத்துவிட்டார். எனவே நாங்கள் டிஸ்சார்ஜ் செய்து சேலத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தோம். பின், 90களின் இடைப்பட்ட காலத்தில் பள்ளிகளில் எனது குழந்தைகளை சேர்க்கும்போது பல தடைகளை எதிர்கொண்டோம். ஆனால், கல்லூரி சேர்கையில் அப்படியான சூழல் இல்லை. பலர் தங்கள் பெயர்களைப் பாராட்டியபோது பெருமையாக உணர்ந்தனர். ஏனெனில், அவர்களின் பெயர்கள் மாணவர்களிடையே உத்வேகத்தை தூண்டும் விதமாக அமைந்தன என்றார் மோகன்.

எனது மூத்த மகன் கம்யூனிசம் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அங்கு தனது பெயர் காரணமாக நீதிபதிகளின் நன்மதிப்பை பெற்றார். கடந்த 60 ஆண்டுகளாக நாங்கள் வசிக்கும் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர். மம்தா பேனர்ஜி, எங்கள் உறவுக்கார பெண்தான். இப்படியான பெயர்களை என் மகன்கள் பெற்றதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவ்வளவு ஏன், பெரியார் கூட 1940 முதல் 1945 வரை சோவியட் நாட்டிற்கு சென்று திரும்பிய பிறகு, தனது குழந்தைகளுக்கு ரஷ்யா, மாஸ்கோ என்று பெயரிட்டார். பழனிசாமி, கந்தசாமி, முனுசாமி போன்ற பெயர்களைக் கேட்டால் தமிழக மக்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள். ஆனால் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் கம்யூனிச சித்தாந்தத்தின் பெயர்களைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே, கம்யூனிச சித்தாந்தத்திற்கு தொடர்புடைய பெயர்களை மட்டுமே எங்கள் வருங்கால சந்ததியினருக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம். கம்யூனிசம் என்பது ஒருபோதும் அழியாது, மனிதகுலம் இருக்கும் வரை கம்யூனிசம் இருக்கும் என நான் நம்புகிறேன். எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு கியூபாயிசம் என பெயரிட முடிவு செய்துள்ளோம் என்றார் மோகன்.
Published by:Archana R
First published: