Home /News /trend /

காபூல் ஏர்போர்ட்டில் 1 பாட்டில் தண்ணீர் ரூ.3,000, 1 பிளேட் சாப்பாடு ரூ.7,500 - ஆப்கானியர்கள் அதிர்ச்சி!

காபூல் ஏர்போர்ட்டில் 1 பாட்டில் தண்ணீர் ரூ.3,000, 1 பிளேட் சாப்பாடு ரூ.7,500 - ஆப்கானியர்கள் அதிர்ச்சி!

காபூல்

காபூல்

காபூல் விமான நிலையத்தில் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் மிக மிக அதிகமாக இருப்பதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் தங்களிடம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் அமைப்பு தற்போது இரண்டாவது முறையாக கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தி உள்ள நிலையில், அங்கு தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே முதல் முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபான்கள் போட்ட ஆட்டமே இன்னும் அந்நாட்டு மக்களின் மனதை விட்டு மறையாத நிலையில், 20 வருடங்களுள் மீண்டும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பது அந்நாட்டு மக்களை மிக கடுமையான நெருக்கடியில் தள்ளியுள்ளது.

கடுமையான ஷரியா சட்டத்தை கடைபிடிக்கும் தீவிரவாத குழுவின் கீழ் வாழ்வதை தவிர்க்க நாட்டை விட்டு தப்பி ஓட ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் முயற்சித்து வருகின்றனர். சில ஆப்கான் குடிமக்கள் நாட்டை விட்டு தப்பிக்க முடிந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு அகதிகளாக செல்லும் முடிவில் உறுதியுடன் இருக்கிறார்கள். எனவே அந்நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் விமான நிலையம் நோக்கி படையெடுத்து கொண்டே இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் நிலைமை இன்னும் சீராக்கவில்லை. குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எண்ணிலடங்கா மக்கள் கூட்டம் காபூல் விமான நிலையத்தின் அருகில் குவிந்திருக்கும் நிலையில், ஏராளமான மக்கள் தங்களது அடிப்படை தேவையான உணவு மற்றும் தண்ணீருக்காகவும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் வாயில்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது அவர்களது உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை மேலும் கடினமாக்கியுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் மிக மிக அதிகமாக இருப்பதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் தங்களிடம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அவர் கூறியிருக்கும் தகவலின் படி, ஒரு பாட்டில் தண்ணீர் 40 அமெரிக்க டாலருக்கும், 1 பிளேட் சாப்பாடு 100 அமெரிக்க டாலருக்கும் விற்கப்படுகிறது. அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி ஒரு பாட்டில் தண்ணீரின் விலை தோராயமாக ரூ.3000, 1 பிளேட் அரிசி விலை தோராயமாக ரூ.7,500 ஆகும்.

Also read... சுமார் 10 வருடங்கள் தாலிபான்களை முட்டாளாக்கிய ஆப்கான் இளம்பெண் - எப்படி, ஏன்?

எப்படியாவது தப்பி பிழைத்து நாட்டை விட்டு சென்றால் போதும் என்று காபூல் விமானநிலையத்தை முற்றுகையிட்டுள்ள ஆப்கானின் சாதாரண குடிமக்கள் 1 தண்ணீர் பாட்டில், 1 பிளேட் அரிசியின் விலையை கேட்டு ஆடி போயுள்ளனர். இதன் மூலம் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது உயிர்வாழ உதவும் அத்தியாவசிய தேவைகளான தண்ணீரும், உணவும். மக்கள் பணத்திற்காக மட்டுமல்ல, அவர்கள் உயிர் வாழ்வதற்காகவும் கூட சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு தெளிவான உதாரணம். அவல நிலையில் நாடு இருக்கும் போது, அடிப்படை பொருட்களின் விலையை உயர்த்துவது மிகவும் மனிதாபிமானமற்ற செயல் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதனிடையே ராய்ட்டர்ஸ் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள வீடியோவில் பேசும் ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவர் இந்த விமான நிலையத்தில் அதிக கூட்டம் இருப்பதால், பெண்களும் குழந்தைகளும் "பரிதாபமான நிலையில்" இருப்பதாக குறிப்பிடுகிறார். மற்றொரு நபர் அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதை தெரிந்து கொண்டபிறகு, தாமும் வெளிநாடு செல்ல இங்கு வந்திருப்பதாக கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Afghanistan

அடுத்த செய்தி