சிசிடிவியல் வசமாக சிக்கிய சேட்டை பைக்கர் - ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை
சிசிடிவியல் வசமாக சிக்கிய சேட்டை பைக்கர் - ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை
வைரல் வீடியோ
Viral Video : இந்த காட்சியின் சிசிடிவி பதிவுகளை போக்குவரத்து காவல் துறையினர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். வாகன ஓட்டியின் செயல்பாடு குறித்து கிண்டலாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் கவனக்குறைவு காரணமாக நிகழ்பவை ஆகும். சிக்னல்களை கவனிக்காமல் அல்லது அத்துமீறி வாகனங்களை ஓட்டிச் செல்வது, ஒருவழிப் பாதையில் எதிர்புறத்தில் இருந்து பயணிப்பது, இண்டிகேட்டர் பயன்படுத்தாமல் சட்டென்று வாகனத்தை திருப்புவது போன்ற எண்ணற்ற விதிமீறல்களை வாகன ஓட்டிகள் செய்கின்றனர்.
இதில், ஹைலட்டாக பலர் செய்யும் விதி மீறல் என்ன என்றால் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுவது அல்லது ஃபோன் பேசியபடியே வாகனம் ஓட்டுவது என்பதாகும். இந்த இரண்டு விதிகளையும் சேர்த்தே மீறுவோரை கூட நாம் சாலைகளில் அவ்வபோது நேரில் பாத்திருக்க முடியும். ஆனால், இரண்டு கைகளிலும் ஃபோன்களை பயன்படுத்தியவாறே பயணிக்கும் நபரை நீங்கள் பார்த்தது உண்டா? அதுவும் ஹெல்மட் அணியாமல்? ஆம், அப்படியொரு நிகழ்வு குஜராத் மாநிலம், வதோதரா நகரில் நிகழ்ந்துள்ளது.
இந்நகரின் போக்குவரத்து காவலர்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் வாகன ஓட்டிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பைக் ஓட்டி வரும் நபர் ஒருவர் காதில் ஒரு ஃபோன் வைத்து பேசியபடியே வந்தார். திடீரென அவர் வைத்திருந்த மற்றொரு ஃபோனிலும் அழைப்பு வந்துவிட்டது போல. பாவம் மனிதர் என்ன செய்வார்! மற்றொரு கையில் அந்த ஃபோனையும் எடுத்து கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இப்போது பைக் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தானாக சென்று கொண்டிருக்கிறது.
Vadodara City Police has issued an e-challan to this person for traffic rules violation. pic.twitter.com/4Ntg3HJ6OM
இந்த காட்சியின் சிசிடிவி பதிவுகளை போக்குவரத்து காவல் துறையினர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். வாகன ஓட்டியின் செயல்பாடு குறித்து கிண்டலாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். காவல் துறையின் டிவிட்டர் பதிவில், “இரண்டு கைகளிலும் 2 ஃபோன்கள். இது எல்லாம் பைக் ஓட்டிக் கொண்டிருக்கும் போது. பிஸியான இந்த மனிதரைப் பாருங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதர் செய்த செயல், பார்ப்பதற்கு வேடிக்கையாகவோ அல்லது சாகச செயலாகவோ தோன்றலாம். ஆனால், சாலையில் பயணிக்கும் தனக்கும் பாதுகாப்பு இல்லாமல், சக பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படாமல் அவர் மேற்கொண்ட செயல் அப்பட்டமான விதிமீறல் ஆகும். குற்றம் இழைத்த நபர், மகேஷ் மஹிஜானி என்பது தெரியவந்தது. அவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து - சலானை காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது, இந்திய மோட்டார் வாகன விதிகளின்படி சட்டவிரோத செயல் ஆகும். சிலர் வாகனங்களை ஓட்டும்போது ஃபோன் பேசுவதற்காக அல்லது மியூஸிக் கேட்பதற்காக ஹெட்செட் மாட்டியிருப்பார்கள். அதுவும் கூட சட்ட விரோதம் தான். சிலர் ஹெல்மெட் உள்ளே ஃபோன் மற்றும் ப்ளூடூத் ஹெட்செட் போன்றவற்றை காதருகே வைத்திருப்பார்கள். இதுவும் சட்டவிரோத செயல் ஆகும். வாகனம் ஓட்டும்போது, நீங்கள் எந்தவித எலெக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதே விதியாகும். காரில் செல்லும்போது நீங்கள் மியூஸிக் கேட்பது என்றாலும் கூட, அது பிற ஓட்டுநர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வண்ணம் பயன்படுத்த வேண்டும்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.