வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வினுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அட்டகாசமாக நடனம் ஆடியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலானது பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளது. இப்பாடலுக்கு ஆண் - பெண் பேதமின்றி அனைத்து வயதினரும் விஜயின் அந்த தனித்துவமான நடன அசைவுகளை தாங்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒரு சின்ன நடனமாடினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்த நிலையில் பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்காக அகமதாபாத் சென்றடைந்த இந்திய அணியினர் சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த டெஸ்டில் தனது ஆல் ரவுண்டர் திறமையின் மூலம் இந்திய அணியின் வெற்றியை வசப்படுத்த உதவிய ரவிச்சந்திரன் அஸ்வின், அடுத்த டெஸ்ட் போட்டிக்கு மிகவும் ரிலாக்ஸ் ஆக தயாராகி வருவது தெரியவருகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஹர்திக் பாண்டியா, இடது கை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளனர். அகமதாபாத்தில் உள்ள ஜிம்மில் பயிற்சியின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. Vaathi should be happy! என்ற தலைப்பிலான இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருவதால் இந்திய அளவில் இது ட்ரெண்டிங் ஆக தொடங்கியுள்ளது.
குறிப்பாக இந்த வீடியோவில் குல்தீப் யாதவின் நடன அசைவுகள் வெறித்தனமாக உள்ளது. அவர் மிகவும் துடிதுடிப்புடன் இப்பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதை சமூக வலைத்தள வாசிகள் போட்டி போட்டுக்கொண்டு பகிர்ந்து வருகின்றனர்.