வைரல் வீடியோ : முறிந்து விழுந்த மரத்திலிருந்து எஸ்கேப் ஆன பெண்!

வைரல் வீடியோவின் காட்சி

எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சரிந்து விழுந்தது. அதனை பார்த்த பெண் உடனடியாக சுதாரித்துக்கொண்டு மரம் மேலே விழுவதில் இருந்து தப்பித்தார்.

  • Share this:
மரம் மேலே விழுவதில் இருந்து எஸ்கேப் ஆன பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

டவ்தே புயல் காரணமாக மும்பையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. தீயணைப்புத் துறையினர் அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெண் ஒருவர் மழையில் சாலையில் குடையுடன் நடந்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சரிந்து விழுந்தது. அதனை பார்த்த பெண் உடனடியாக சுதாரித்துக்கொண்டு மரம் மேலே விழுவதில் இருந்து தப்பித்தார். சற்று தாமதித்திருந்தாலும் அந்த மரம் அவர் மீது விழுந்திருக்கும். இந்த காட்சிகள் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை ஏஎன்ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட கடலோர மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் கடலோரங்களில் வசித்து வந்த 12 ஆயிரத்து 420 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பலத்த காற்றின் காரணமாக மின் தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்தது. பி.கே.சி.யில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா மெகா தடுப்பூசி மையம் காற்றில் பறந்தது.

 


சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய பிளாஸ்டிக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. காட்கோபரில் மின்சார ரயில் மீது மரம் விழுந்தது. நாள் முழுவதும் மோனோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா- ஒர்லி கடல் மேம்பாலம் மூடப்பட்டது. மும்பையில் ஏற்பட்ட புயலின் போது காற்று மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசியுள்ளது. இதன் காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 2500 வீடுகள் சேதமைடந்துள்ளன. மும்பையில் 20 மிமீ மழை பெய்துள்ளது. இது ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையளவு இதுவாகும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் இந்த புயல் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை சரி செய்வதில் மேலும் சில நாட்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் கொரோனா பாதித்த நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது  போன்ற அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இது சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரும் கடினமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: