வானத்தில் மேகமூட்டம் சற்று அதிகமாக இருப்பது, ஓடுபாதையில் மழைநீர் தேங்கி நிற்பது, போதிய வெளிச்சமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் விமானங்களை இயக்குவதில் பொதுவாக சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். இருப்பினும், இவற்றை எல்லாம் முன்கூட்டியே கணித்து, பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதி செய்த பிறகே விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேசமயம், விமானங்கள் புறப்பட்ட பிறகு, தரையிறங்கும் சமயத்திலும் இதுபோன்ற சிக்கல்கள் எதிர்பாராத விதமாக நடைபெற்று விடுவது உண்டு.
அப்படியொரு சம்பவம் தான், பிரிட்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனை தாக்கியுள்ள யூனிஸ் புயல் காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழை காரணமாக நெட்வொர்க் சேவைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில் புயல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவது குறித்தும் மற்றும் சின்னஞ்சிறு விபத்துகள் நிகழ்வது குறித்தும் செய்திகள் வருகின்றன. அதேசமயம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : கணவன் மனைவியை லேசாக அடிப்பதால் தவறில்லை... பெண் அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பிரிட்டனோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு உண்டு என்ற வகையில், புயல் குறித்த செய்திகளையும், லைவ் வீடியோக்களையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக, பிரிட்டனுக்கு விமான பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பவர்களுக்கு புயல் மற்றும் விமான சேவைகளின் மாற்றம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியாமிறது.
இத்தகைய சூழலில், ஹீத்ரு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க இருந்த சமயத்தில், திடீரென கடும் காற்று வீசியது. ஆனால், அதை சமாளித்து விமானத்தை, ஏர் இந்தியா பைலட் லாவகமாக தரையிறக்கியது குறித்து பொதுமக்களும், நெட்டிசன்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய முறையில் இந்தியரை மணந்த பிரிட்டன் தூதரக பெண் அதிகாரி!
குறிப்பாக, பல விமானங்கள் புயல் காரணமாக தரையிறங்குவதற்கு பெரும் சவால்களை எதிர்கொண்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்த பிறகே பிற விமானங்களை பைலட்டுகளால் தரையிறக்க முடிந்தது. ஆனால், ஏர் இந்தியா பைலட், முதல் முயற்சியிலேயே விமானத்தை தரையிறக்கி விட்டார். வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோன்று ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் ஒன்றும் தரையிறங்குவதற்கு பெரும் சிரமம் அடைந்தது. ஆனால், பைலட்டின் திறமை காரணமாக அந்த விமானமும் முதல் முயற்சியிலேயே தரையிறக்கப்பட்டது. விமானங்கள் தரையிறங்கும் காட்சிகளை, பிக் ஜெட் டிவி சானலின் நிறுவனர் ஜெர்ரி டயர்ஸ், படம் பிடித்துள்ளார். புயலுக்கு மத்தியில் தரையிறங்கிய இரண்டு ஏர் இந்தியா விமானங்களும் ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டுச் சென்றவை ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.