யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

#ArrestLucknowGirl

டேக்ஸி ஓட்டுநரை இளம்பெண் ஒருவர் போலீஸ் முன்னிலையில் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரலான நிலையில் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

  • Share this:
நடுரோட்டில் இளம் பெண் ஒருவர் டேக்ஸி ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த இளம் பெண்ணை கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

கண்டுகொள்ளப்படாத சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டுவதே சமூக வலைத்தளங்களின் சிறப்பாகும். சமூக வலைத்தளங்களில் வெளிச்சம் பெற்ற பின்னரே சில விவகாரங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. அது போன்ற படங்களோ அல்லது வீடியோக்களோ நெட்டிசன்களால் வைரலாக பகிரப்படுகிறது.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள வீடியோ ஒன்றில் டேக்ஸி ஒட்டுநர் ஒருவரை நடுரோட்டில் வைத்து போலீசார், பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம் பெண் ஒருவர் தாக்குகிறார். இத்தனைக்கும் அங்கு கூடியிருந்தவர்களில் ஒரு சிலர் அந்த இளைஞர் தாக்கப்படுவதை தடுக்க முற்பட்ட போது அவர்களையும் அந்த இளம் பெண் தாக்குகிறார். மனிதநேயமற்ற இத்தனை கொடூர தாக்குதலுக்கு என்ன தான் காரணம்?

Also Read:  குதிரன் சுரங்கப்பாதை திறப்பு: கோவையிலிருந்து கேரளா செல்வோர் ஹேப்பி!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள அவாத் கிராஸிங் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கவில்லை.அந்த வீடியோவில் சாலையின் நடுவே டேக்ஸி ஓட்டுனர் ஒருவரின் சட்டக் காலரைப் பிடித்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் அவரை சரமாரியாக தாக்குகிறார். கன்னத்தில், முகத்தில் அறைகிறார். இந்த களேபரத்தை காண அங்கு மக்கள் கூட்டமே கூடிவிட்டது. போலீஸ் ஒருவரும் அங்கு வந்து பெண்ணின் தாக்குதலை தடுக்க முற்பட்ட போதும் கூட அந்த இளம் பெண் தொடர்ந்து அவரை தாக்குகிறார்.தாக்கப்படும் நபர் ஒட்டிவந்த கார் அவரை இடித்துவிட்டதாக கூறிக்கொண்டே எகிறி எகிறி அவர் அந்த ஓட்டுனரை அடிக்கிறார். எப்படியும் 20 தடவைக்கு மேல் அந்த நபருக்கு அடி விழுந்திருக்கிறது. இருப்பினும் ஆக்ரோஷத்துடன் நடந்துகொண்ட அப்பெண் அவரை விடுவதாக இல்லை. அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் அந்த பெண்ணின் பிடியில் இருந்த டேக்ஸி ஓட்டுனரை பிடித்துக் கொண்டு சமாதானம் செய்ய முற்படுகின்றனர். திடீரென சமாதானம் செய்தவர்களையே அந்தப் பெண் தாக்குகிறார்.

Also Read:  குளிக்கச் சென்ற இடத்தில் பெற்றோரை பலிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் 13 வயது சிறுமி!

என்ன தான் பிரச்னையென்றாலும் நடுரோட்டில் வைத்து ஒரு சாமானிய டேக்ஸி ஓட்டுநரை இப்படியா அடிப்பது என அங்கு கூடியிருப்போர் பேசுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த கொடூர தாக்குதல் வீடியோ நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டேக்ஸி ஓட்டுனருக்கு பதிலாக அதே இடத்தில் ஒரு பெண் இருந்திருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என சமூக வலைத்தள வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவறு செய்திருந்தால் காவல்துறையினரிடம் ஒப்படைப்பதை விட்டுவிட்டு மனிதாபிமானமற்ற வகையிலான இந்த தாக்குதலை ஒரு இளம் பெண் அரங்கேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது, அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் அந்த டேகின் கீழ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: