மக்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக தங்களது உயிரைக் காப்பாற்றுவார் என மருத்துவர்கள் மீது தான் அதிக நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் மருந்தை உட்கொள்வது முதல் அறுவை சிகிச்சைக்கு சம்மதிப்பது வரை மருத்துவர்களின் வாக்கை நம்பி தன்னை முழுதாக ஒப்படைக்கின்றனர். கொரோனா காலத்தில் மருத்துவ உலகின் மகத்தான சேவையையும், அதன் உன்னதத்தையும் மக்கள் மதித்து போற்றினர். ஓய்வின்றி, உணவு, உறக்கம் என எதுவுமின்றி மருத்துவமனையில் குவிந்த கொரோனா நோயாளிகள் உயிரைக் காக்க சுகாதார பணியாளர்கள் போராடியதை யாரும் மறக்க முடியாது.
உலகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மதிப்பும், மரியாதையும் அதிகரித்து வரும் இதே நேரத்தில் வெனிசுலாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களின் செயலால் நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் வயிற்றில் ஒரு ஜோடி கத்தரிக்கோலை வைத்து தைத்ததால், அது அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளது. ஆனால் இந்த கோரச்சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்கள் விடுதலையான சம்பவமும் அரங்கேறியுள்ளது.
வெனிசுலாவில் உள்ள மரகாய்போ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வயிற்று சம்பந்தமான அறுவை சிகிச்சைக்காக இவான் சாவேஸ் என்ற நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வீக்கமடைந்த டைவர்டிகுலாவுக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருந்துவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சில நாட்களிலேயே இவான் சாவேஸுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
நாளாக நாளாக உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சாப்பிடுவதற்கும் குளியலறையைப் பயன்படுத்துவதற்கும் கூட முடியாத அளவிற்கு கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவர்களை சந்தித்த அவருக்கு, பல சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்ட போதும், வயிற்று வலி குறையவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, மருத்துவ ஊழியர்கள் எடுத்த எக்ஸ்ரேவில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரது வயிற்றில் ஒரு ஜோடி கத்தரிக்கோலை மறதியாக வைத்து தைத்துள்ளது தெரியவந்துள்ளது.
கத்தரிக்கோலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக சாவேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் அறுவை சிகிச்சை முடிந்து 5 நாட்கள் ஆன நிலையில் அவர் இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவே உயிரிழந்தார். இவான் சாவேஸ் மரணத்திற்கு அறுவை சிகிச்சை நிபுணர்களின் கவனக்குறைவே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டினர்.
Also read... ஹோட்டல் ரூமில் தூங்கிய போது நிகழ்ந்த விபரீதம் - காது கேட்காததால் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த நபர்!
மரகாய்போ பல்கலைக்கழக மருத்துவமனையைச் மருத்துவரான ஃப்ரெடி பச்சனோ அரேனாஸ் தனது ட்விட்டரில், இவான் சாவேஸ் வழக்கில் சிக்கிய தனது சக மருத்துவர்களான ஜெரார்டோ நுனேஸ் மற்றும் அறுவை சிகிச்சை செய்த லூயிஸ் கோம்ஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் தனது ட்விட்டரில் "ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற விரும்பும் ஒரு செயலில் வேண்டுமென்றே கொலை செய்ததற்காக ஒருவரைக் குறை கூறுவது சாத்தியமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதாவது அறுவை சிகிச்சையின் போது சாவேஸின் வயிற்றில் தவறுதலாக வைக்கப்பட்ட கத்தரிக்கோலால் அவரது மரணம் நிகழவில்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார். மறுபுறம், இறந்தவரின் குடும்பத்தினர், மருத்துவர்கள் அவரது உண்மை நிலையை மறைத்துவிட்டதாகவும், எந்த தவறும் நடக்கவில்லை என பாசாங்கு செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.