உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. போர் சூழல் ஒருபுறம் தீவிரம் அடைந்து கொண்டிருப்பதால், மற்றொரு புறம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இத்தகைய இக்கட்டான சூழலில், உலகெங்கிலும் உள்ள நல்லெண்ணம் கொண்ட மக்கள் ஏதோ ஒரு வகையில் உக்ரைன் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அத்தகைய நபர்களில் ஒருவர் தான் பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி ஹூக்ஸ்.
உக்ரைனில் இருந்து அகதியாக வந்த குடும்பம் ஒன்று தங்குவதற்காக 3 பெட்ரூம்களை கொண்ட வீடு ஒன்றை இவர் விலைக்கு வாங்கியிருக்கிறார். அதன் விலை 1,00,000 பவுண்டுகள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.98 லட்சம் ஆகும். வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தனக்கு வந்தது என்பது குறித்து ஃபேஸ்புக்கில் விரிவான பதிவு ஒன்றை ஜேமி ஹூக்ஸ் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “போர் தொடர்பான வீடியோக்களைப் பார்த்து நான் மனம் உடைந்து போனேன். அகதியாக வந்த குடும்பம் ஒன்று தங்குவதற்காக எனது வீட்டிலேயே இடவசதி செய்து கொடுக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், வீட்டை விரிவாக்கம் செய்ய 2 முதல் 3 மாத காலம் ஆகும் என்று பொறியாளர் கூறினார். இதைத் தொடர்ந்து புதிய வீடு வாங்கி, அந்த குடும்பத்தினரை தங்க வைக்க முடிவு செய்தோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
also read : தங்கையை மடியில் வைத்துக்கொண்டே பள்ளியில் பாடம் கற்கும் சிறுமி - நெகிழ்ந்து போன அமைச்சர்
மருத்துவமனையில் பணியாற்றியவர்…
உக்ரைனைச் சேர்ந்த மரியாவின் குடும்பம் தான் இப்போது பிரிட்டனில் அகதிகளாக குடியேறுகின்றனர். உக்ரைனில் உள்ள மருத்துவமனையின் மயக்கவியல் சிகிச்சைப் பிரிவில் மரியா பணியாற்றி வந்தார். மரியாவுக்கு வீடு கிடைக்க உதவியவர் ரெணேட்டா பாக்ஸ் ஆகும். இவர் 50க்கும் மேற்பட்ட அகதி குடும்பங்களுக்கு வீடு கிடைக்க உதவியுள்ளார்.
முன்னதாக உக்ரைனில் இருந்து 10, 12 மற்றும் 14 வயதுடைய தனது மகன்களுடன் அகதியாக கிளம்பினார் மரியா. அவர்களது விஸா நடைமுறைகள் எல்லாம் கிளியர் ஆனது என்றால் ஏப்ரல் 10ஆம் தேதி புதிய வீட்டில் குடியேற இருக்கின்றனர்.
ஜாமி ஹூக்ஸ்க்கு குவியும் பாராட்டு
அகதி குடும்பம் ஒன்றுக்கு வீடு வழங்குவது குறித்த ஃபேஸ்புக் பதிவில் பல உருக்கமான தகவல்களை ஹூக்ஸ் பகிர்ந்து கொண்டிருந்தார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “உக்ரைனில் எனக்கு யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், அகதியாக வரும் ஒரு குடும்பத்திற்கு வீடு வழங்க முடிவு செய்தேன். அகதிகளுடன் தொடர்பில் இருக்கும் ரேணேட்டாவை அணுகினேன். அவர் மரியாவை தொடர்பு கொள்ள உதவினா. மரியாவுடன் ஒருமுறை ஃபோனில் பேசினேன். அவர் உக்ரைனில் இருந்து வெளியேறி போலந்து வழியாக பிரிட்டன் வருகிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹூக்ஸின் கருணை ஆச்சரியம் மிகுந்தது என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
ஹூக்ஸ் செய்த உதவியை பார்த்து, அவரது சுற்றியுள்ள நபர்களும் அகதிகளுக்கு வீடு வழங்க தயாராகி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.