ஒரு இளைஞருக்கு 2 காதலிகள்... டாஸ் போட்டு மணப்பெண் தேர்வு

ஒரு இளைஞருக்கு 2 காதலிகள்... டாஸ் போட்டு மணப்பெண் தேர்வு

இளைஞர் ஒருவரை திருமணம் செய்ய அவரது 2 காதலிகளும் ஆர்வம் காட்டியதால் டாஸ் போட்டு மணப்பெண் தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.

 • Share this:
  காதல் விவகாரங்கள் தொடர்பான பல வினோதமான சம்பவங்களை நாம் பார்திருப்போம். ஆனால் முக்கோண காதல் விவகாரத்தால் ஒரு விசித்திரமான வழக்கில் மணப்பெண்ணை டாஸ் போட்டு பஞ்சாயத்தில் தேர்வு செய்துள்ளனர். ஒரு டாஸ் மூன்று நபர்களின் தலைவிதியை தீர்மானித்துள்ளது.

  கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தின் சக்லேப்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் சினிமா காட்சிகளுக்கு இணையாக இருந்துள்ளது. சக்லேஸ்பூர் கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் அருகில் உள்ள கிராமத்தில் 20 வயது இளம்பெண்ணைிடம் நட்பாக பழகி பின் காதலித்து வந்துள்ளார். இதேப் போன்று மற்றொரு கிராமத்தில் இருக்கும் இளம்பெண்ணையும் அந்த இளைஞர் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். ஒரே சமயத்தில் இருவரை அந்த இளைஞர் காதலிப்பது அந்த பெண்களுக்கு தெரியாமல் இருந்து உள்ளது.

  ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் இருவரை காதலிப்பது தெரியவர பெண்கள் இருவரும் கிராம பஞ்சாயத்தை அணுகி உள்ளனர். பஞ்சாயத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள யாருக்கு விருப்பம் என்று கேட்க இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த பஞ்சாயத்து தலைவர்கள் மூன்று குடும்பத்தினரையும் அழைத்து பேசி உள்ளனர்.

  இந்த பிரச்னையில் பஞ்சாயத்து சொல்வதே இறுதி தீர்ப்பாக இருக்க வேண்டும். இதை மீறி காவல்துறை அல்லது நீதிமன்றத்தை அணுக கூடாது என்று எழுதி வாங்கி உள்ளனர். அதை தொடர்ந்து மணப்பெண்ணை டாஸ் போட்டு தேர்வு செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். டாஸில் அந்த இளைஞர் முதலில் காதலித்த பெண் வெற்றி பெற்றுள்ளார். டாஸில் வெற்றி பெற்ற பெண், அந்த இளைஞருக்காக தற்கொலை முயற்சி வரை சென்றவர். இதனால் அந்த இளைஞர் மகிழ்ச்சி உடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார்.

  இந்த விவகாரம் இதன் உடன் முடியவில்லை. டாஸில் தோல்வியடைந்த பெண்ணின் செயல் தான் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த பெண் டாஸில் வெற்றி பெற்ற பெண்ணை கட்டிபிடித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் தன்னை காதலித்து ஏமாற்றிய அந்த இளைஞனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, எச்சரிக்கை செய்து கிளம்பினார். சினிமாவையே மிஞ்சும் பல காட்சிகள் இவர்களின் காதலில் இடம் பெற்றது சுவாரஸ்யமாகவே அமைந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: