இந்தப் பிரபஞ்சம் கோடி கோடியான அதிசயங்களை உள்ளடக்கி வைத்துக் கொண்டு நாளுக்கு ஒன்றாய் வெளிப்படுத்தி வருகிறது. சிலவற்றை நாமே தேடிக் கண்டுபிடித்து விடுகிறோம். பிரபஞ்சம் குறித்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும், செய்தியும் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன. அப்படிப்பட்ட ஆச்சரியரியத்தை ஏற்படுத்தியிருக்கும் அண்மை கண்டுபிடிப்புதான் பூமியை ஒத்த இரண்டு கிரகங்களின் கண்டுபிடிப்பு. உலக நாடுகள் பலவும் விண்வெளி ஆராய்ச்சியில் பல முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ராக்கெட் மூலம் நிலவில் மனிதன் கால் வைத்த நொடியே விண்வெளி முழுவதும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை மனிதனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சி தான் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வின் முன்னேற்றங்கள். இப்படி விண்வெளி முழுவதும் சக்திவாய்ந்த டெலஸ்கோப்புகளை பொருத்திக் கொண்டு நொடிக்கு நொடி கண்காணித்து வருகிறது ஒரு பெரிய ஆராய்ச்சியாளர்கள் குழு.
அவர்களை உற்சாகமூட்டும் விதமாக அவ்வப்போது சில கண்டுபிடிப்புகளும் கிடைக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட தேடலில் கிடைத்தது தான் பூமியைப் போலவான இரண்டு கிரகங்கள்.எக்ஸோபிளானட்ஸ்களான அந்த இரண்டு கிரகங்களும் பூமியில் இருந்து சுமார் 16 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த இரண்டு கிரகங்களும் நமது சூரியைப் போலவே ஒரு ஒளிரும் நட்சத்தித்தை சுற்றி வருகின்றன. இதில் என்ன சிறப்பு என்னெவன்றால் அந்த இரண்டு கிரகங்களும் அவைகள் சுற்றி வரும் சூரியனில் இருந்து குறிப்பிட்ட வாழ்வியல் மண்டலத்திற்குள் இருப்பது தான்.
வாழ்வியல் மண்டலம் என்றால் ஒளிரும் சூரியனின் வெப்பம் உயிர்களை தாக்காத அளவிற்கும், சூரியனின் வெப்பமே கிடைக்காத அளவில்லாத சரியான தூரத்திலும் உயிர்கள் வாழ்வதற்கான சீதோஷ்ன நிலை இருக்கும் தூரம் தான் வாழ்வியல் மண்டலம். அப்படிப்பட்ட வாழ்வியல் மண்டலத்தில் இரண்டு கிரகங்களும் இருக்கிறதாம். வானியல் ஆராய்ச்சியில் முன்னோடி அமைப்பான IAC( Instituto de Astroficia de Canarias) 1975 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் கேனரி தீவில் தொடங்கப்பட்டது. வானியல் தொடர்பான பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
IAC ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் இந்த இரண்டு கிரகங்களின் தன்மை குறித்து விபரங்கள் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு கிரகங்களிலும் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் கண்டிப்பாக இருக்கும் என அடித்துச் சொல்கிறார் IAC ஆராய்ச்சியாளரான அலெஜான்ட்ரோ மஸ்காரினோ. அதோடு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு கிரகங்களோடு சேர்த்து அண்ட வெளியில் இது வரை ஏழு கிரகங்கள் வாழ்வியல் மண்டலங்களுக்குள் உயிர்கள் வாழும் சூழலோடு இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் கூறுகிறார் மஸ்காரினோ.
பூமியை ஒத்த இந்த இரண்டு புதிய கிரகங்களுக்கும் GJ 1002b மற்றும் GJ 1002c எனப் பெயரிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். இந்த கிரகங்களில் தண்ணீர் போன்ற நீர்மம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாகவும் நம்புகிறார்கள் அவர்கள். தண்ணீர் இருந்தாலே அது உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியமான அம்சம் தானே. GJ 1002b கிகரம் தனது சூரியனைச் சுற்றிவர பத்து நாட்கள் எடுத்துக்கொள்ளுமாம். ஆனால் GJ 1002c தனது சூரியனைச் சுற்றிவர 21 நாட்கள் எடுத்துக்கொள்ளுமாம். இந்த இரண்டு கிரகங்கள் குறித்து மேலும் தீவிரமான ஆராய்ச்சிகளை வானியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு வேளை புதிய கிரகங்களில் மனிதன் வாழும் சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ரெடி விடு ஜூட் தான்…
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.