அமெரிக்காவில் 1880-களில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஜீன்ஸ் பேண்டுகள், தற்போது நம்ப முடியாத விலைக்கு ஏலம் போயுள்ளன.
உலகம் முழுவதும் மக்களிடையே பரவிக் கிடக்கும் ஆடை கலாச்சாரத்தை முற்றிலும் மாற்றிய ஓர் ஆடை என்றால் அது ஜீன்ஸ் தான்.ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் பிற உடைகளை விட, ஜீன்ஸ் பேண்டை ஓர் வசதியான ஆடையாக உணர்வதே அதன் வெற்றிக்கு காரணம் ஆக இருக்கிறது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு சுரங்கப் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆடையாக கூறப்படுகிறது ஜீன்ஸ். அதேபோல், அமெரிக்காவில் கவ்பாய் எனப்படும் மாடு மேய்ப்பவர்களுக்காக தயாரிக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு. ஜீன்ஸ் பேண்ட் உருவானதற்கு இவ்வாறு பல தரப்பிலும், பல கதைகள் இருந்தாலும், அது பிரபலமாகத் தொடங்கிய காலம் 1950-கள் தான். ஜீன்ஸ் பேண்ட் என்றால் என்னவென்றே தெரியாத மக்களிடையே, ஹாலிவுட் ஃபேஷன் என்ற பெயரில் பிரபலமாகத் தொடங்கியது.
1953-ல் வெளியான தி வைல்ட் ஒன் (The Wild One) என்ற ஹாலிவுட் படத்தில், ஜீன்ஸ் பேண்டின் பிராண்ட் அம்பாசிடர் போல படம் முழுக்கவே வலம் வந்தார் நடிகர் மார்லன் பிராண்டோ . அதன்பிறகு, ஆண்கள் அனைவருக்கும் ஜீன்ஸ் பேண்ட் மீதான மோகம் அதிகரிக்க காரணமாக அமைந்த படம், ஜேம்ஸ் டீன் நடித்த ரிபெல் வித்அவுட் எ காஸ் (Rebel without a Cause).1961-ல் தி மிஸ்ஃபிட்ஸ் (The Misfits) படத்தில் ஜீன்ஸ் பேண்டில் வலம் வந்து, பெருவாரியான பெண்களை, ஜீன்ஸ் உலகத்திற்கு அழைத்து வந்தவர் மர்லின் மன்றோ.
இவ்வாறு ஹாலிவுட் படங்கள் மூலம் பரவி, 21-ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் கிளைபரப்பி, இன்று அன்றாட ஆடைகளில் ஒன்றாக மாறிவிட்டது ஜீன்ஸ் பேண்ட். லூஸ் பிட், ஸ்லிம் பிட், ரெகுலர் பிட் என எத்தனையோ ஜீன்ஸ் பேண்ட்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன.
இவற்றுக்கு நடுவே, இன்றைய இளைஞர்களை ஈர்த்திருப்பதில் முக்கியமானது, Faded என்ற பெயரில் விற்கப்படும் சாயம் வெளுத்துப்போன ஜீன்ஸ்கள் தான். அதேபோல், டிஸ்ட்ரெஸ்டு (distressed) என்ற பெயரில், பழைய கந்தல் துணிபோல, காணப்படும் ஜீன்ஸ் பேண்ட்களின் ஆரம்ப விலையே சில ஆயிரங்கள் விற்கப்படுகின்றன.
இவற்றைப் போல, இன்னும் பல வகை பெயர்களோடு, மாறுபட்ட மாடல்களில் சந்தைகளில் விற்கப்படும் ஜீன்ஸ் பேண்ட்களுக்கு பஞ்சமில்லை.இந்த ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லெவி ஜீன்ஸ், 1880ஆம் ஆண்டு தயாரித்த ஜீன்ஸ் பேண்ட்கள் தான், இன்றைய சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது .
அதற்கு காரணம், 140 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிறுவனம் தயாரித்த இரண்டு ஜீன்ஸ் பேண்ட்டுகள் இந்திய ரூபாய்க்கு 72 லட்சத்துக்கு ஏலம் போனதுதான். அமெரிக்காவில் கடந்த 1853ஆம். ஆண்டில், லெவி ஸ்ட்ராஸ் என்பவரால் தொடங்கப்பட்டது, இன்றைய லெவி ஜீன்ஸ் நிறுவனம்.
ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட அவர், பிழைக்க வந்த அமெரிக்காவில் தொடங்கிய நிறுவனம்தான், இந்த லெவி ஜீன்ஸ். இந்த நிறுவனம், 1880-களில் தயாரித்த இரண்டு ஜீன்ஸ் பேண்டுகள், அமெரிக்க சுரங்கம் ஒன்றில், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்பி வாங்கும் Faded மற்றும் distressed டிசைனில் இருந்தன, அந்த இரண்டு ஜீன்ஸ்களும்.
தற்போதைய இண்டர்நெட் உலகில் எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்ற நிலை இருக்கிறது. இந்த இரண்டு ஜீன்ஸ்களையும் ஏலம் விட முடிவு செய்தது தனியார் நிறுவனம்.நியூ மெக்சிகோ மாகாணத்தில் ஜீன்ஸ் பேண்ட்களை ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் நிரம்பி வழிந்தது மக்கள் கூட்டம்.விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில், பழமையான ஆடைகளை சேர்க்கும் ஆர்வலர்களான Kyle Haupert மற்றும் Zip Stevenson ஆகியோர் இணைந்து ஏலம் எடுத்த தொகை 87 ஆயிரத்து 400 டாலர்.
Read More:பைக்கில் இட்லி & சாம்பார் விற்கும் B.Com பட்டதாரி - நெட்டிசன்கள் பாராட்டு....வைரலாகும் வீடியோ
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral News