பெண் குழந்தைகளுக்கு பிறகு பிறக்கும் எந்த குழந்தைக்கும் அக்காவோடு சேர்த்து மொத்தம் இரண்டு தாய் என்பார்கள். இயல்பிலேயே பாசம், பரிவு, மென்மை, இரக்கம், பொறுப்பு போன்ற குணங்களை கொண்ட ஒரு பெண், தனக்கு பின் பிறந்த ஒரு தம்பியை, தங்கையை தாய் போல் கவனிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை!
நம் வீடாக இருந்தாலும் சரி, ஏதோவொரு சாலையோரமாக இருந்தாலும் சரி, ஒரு சிறுமி தனது இளைய உடன்பிறப்பை கவனித்துக்கொள்வதைப் பார்ப்பதென்பது எப்போதுமே மனதைக் கவரும் விஷயங்களில் ஒன்றாகும்! அதிலும் தாய் தந்தை என இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் ஒரு மூத்த சகோதிரி இருந்தால்.. அந்த பெற்றோர்களுக்கு அவள் வெறும் மூத்த மகள் மட்டும் அல்ல; ஒரு "வரமும்" கூட!
அப்படியான ஒரு "வரத்தின்" புகைப்படத்தை தான் மணிப்பூரின் மின்சாரம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆன தோங்கம் பிஸ்வஜித் சிங், ட்விட்டர் வழியாக மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார்.
தோங்கம் பிஸ்வஜித் சிங் பதிவிட்டுள்ள புகைப்படமானது, ஒரு 10 வயது சிறுமி தன் தங்கையை கையில் வைத்து, பார்த்துக்கொண்டபடியே பள்ளிக்கூட வகுப்பில் அமர்ந்து பாடங்கள் கற்பதை காட்டுகிறது. குறிப்பிட்ட புகைப்படம், பார்க்கும் பலரின் இதயத்தை உருக்குகிறது மற்றும் அந்த சிறுமியின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விக்கான உந்துதலை பாராட்ட வைக்கிறது.
also read : பார்வையற்றோருக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் ஷூக்களை வடிவமைத்துள்ள பள்ளி மாணவர்
தோங்கம் பிஸ்வஜித் சிங், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த புகைப்படத்தை வெளியிட்டார், அது தற்போது வரை 15,000 க்கும் மேற்பட்ட 'லைக்ஸ்'களை பெற்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்ததோடு நில்லாமல், இதற்கான கேப்ஷனில், “கல்விக்கான இவளது அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது! மணிப்பூரின் தமெங்லாங்கைச் சேர்ந்த மைனிங்சின்லியு பமேய் என்ற இந்த 10 வயது சிறுமி தனது சகோதரியை கையோடு வைத்து, கவனித்துக்கொண்டே பள்ளியில் படிக்கிறாள், இவளுடைய பெற்றோர் விவசாய வேலைகளுக்கு செல்வதால், இவள் தனது தங்கையை மடியில் வைத்துக்கொண்டே பள்ளியில் பாடம் கற்கிறாள்” என்றும் அமைச்சர் தோங்கம் பிஸ்வஜித் சிங் எழுதி உள்ளார்.
also read : மகனுக்காக தந்தை செய்த தரமான செயல்..3 மாத உழைப்பு.. ரூ.8 லட்சத்தில் உருவான அற்புதம்!
இந்த புகைப்படத்தை கண்டு பூரித்துப்போன ஒரு ட்விட்டர் யூசர், "இந்த அளவிலான அர்ப்பணிப்பு மிக்க குழந்தைகளை பார்க்கும் போது, நமக்கு பேச வார்த்தைகள் கிடைப்பதில்லை. ஆனாலும் இந்த தேசத்தின் வலிமைக்கு காரணமான இத்தகைய வலிமைமிக்க குழந்தைகளை எங்களுக்கு தந்து கொண்டே இருக்கும் இந்த தேசத்தை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று கமெண்ட் செய்து உள்ளார். மற்றொருவர், "இது முற்றிலும் மனதைக் கவரும் ஒரு சம்பவம் ஆகும் மற்றும் இந்த சிறு வயதில் இவளது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது" என்று மற்றொருவர் கமெண்ட் செய்து உள்ளார்.
சமூக ஊடகங்களில் இந்த செய்தியை கவனித்த பின்னர், சிறுமியின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்து, அவளை இம்பாலுக்கு அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் தன் அடுத்தடுத்த ட்வீட்கள் வழியாக தகவல் தெரிவித்து உள்ளார். இந்த சிறுமி பட்டம் பெறும் வரை அவரது கல்வியை தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.