போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல் - உதவி ஆய்வாளர் அதிரடி முடிவு!

போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல் - உதவி ஆய்வாளர் அதிரடி முடிவு!
ராஜ்குமார் - காவல் உதவி ஆய்வாளர்
  • Share this:
10 ஆண்டுகளாக காவல்துறையில் தான் எதிர்கொண்ட பிரச்னைகளை விரக்தியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் 2011 -ம் ஆண்டு பயிற்சி முடித்து, காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார். அவர், பணியில் நேர்மையாக இருந்ததால் பல்வேறு நெருக்கடிகளுக்கும் தொடர்ச்சியான பணியிட மாற்றங்களுக்கும் உள்ளானதாக கூறப்படுகிறது. இதுவரையில் 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சென்னை ஆயுதப்படையிலிருந்து தூத்துக்குடி தருவைகுளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

சென்னை ஆயுதப்படையில் பணியாற்றியது தொடர்பாக ஆவணங்களை ஏன் சமர்பிக்கவில்லை என்று மாவட்ட எஸ்.பி, ராஜ்குமாருக்கு மெமோ கொடுத்துள்ளார். ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படாததால், விரக்தியடைந்த உதவி ஆய்வாளர் ராஜ்குமார், 15 நாள் விடுப்பில் சென்றுள்ளார். அமைச்சுப்பணியாளர்கள் செய்த தவறுக்கு தன்னை அதிகாரிகள் தண்டிப்பதாகவும் ராஜ்குமார் நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.


லஞ்சப்பணத்தை எதிர்ப்பார்க்கும் அமைச்சுப்பணியாளர்களை தான் கவனிக்கவில்லை என்பதால், தனது கோப்புகளை அனுப்பாமல் இருப்பதாகவும் ராஜ்குமார் கூறியுள்ளார். தனது மனைவியின் மருத்துவச்செலவு, வங்கி கடன் ஆகியவற்றை செலுத்த முடியாமல் சிரமப்பட்டுவரும் ராஜ்குமார், உயர் அதிகாரி தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால், கூலி வேலைக்கு போக முடிவு செய்துள்ளதாகவும் புலம்பியுள்ளார்.

 

விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ராஜ்குமார் தனது மனக்குமுறல்களை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியை கூட நம் இஷ்டப்படி வைத்து கொள்ளமுடியாத பணி. சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ள இயலாத பணி.

பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ நமது மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி. காலவரையற்ற பணி, வாராந்திர ஓய்வில்லா பணி, அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி.

இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம் தோறும் அறிக்கை அனுப்பபடும் ஒரே பணி. அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைகூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி.

அமைச்சுப் பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி. மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லகூட முடியாத படி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி.

இதுபோன்ற மன அழுத்தத்தின் காரணமாக செய்யும் தவறுகளினால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வெறுப்பை சம்பாதிக்கும் பணி. இவற்றையெல்லாம் கேட்பதற்கு சங்கங்கள் அமைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரே பணி.

நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டுகள் ஆகியும் சுதந்திரம் கிடைக்காத ஒரே பணி- சீறுடை பணியாளர் எனும் காவல் பணி. இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் "கட்டுப்பாடான துறை". ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தாதா?

இப்படிக்கு,
விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்...

இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி.
அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க: CAA-வுக்கு எதிரானப் போராட்டத்துக்கு காவல்துறை ஒத்துழைக்கும்! சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

 
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading