டிக்டாக் மூலம் பிரபலமானவர் சூர்யா. சமூக வலைதளங்களில் இவர் ரவுடி பேபி சூர்யா என்று அழைக்கப்படுகிறார். இவர் வெளியிடும் டிக்டாக் வீடியோக்கள் சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திவிடும். கவர்ச்சியில் ஈடுபடுகிறார் என விமர்சனம் எழுந்த போது பலரும் இவருக்கு அறிவுரை கூறினர். ஆனால், அவர்களுக்கு தடாலடி பதில் அளித்து வந்தார் ரவுடிபேபி சூர்யா.
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றுள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விமான போக்குவரத்து இன்றி அங்கேயே சிக்கினார். தற்போது சிறப்பு விமான சேவைகள் துவங்கியுள்ளதால், தமிழகம் திரும்பிய சூர்யா, திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கொரோனா பீதியால் போலீசாருக்கும் சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசாரிடம் பேசிய சூர்யா, தான் சிங்கப்பூரில் ஏசி அறையிலேயே இருந்துவிட்டதாகவும், தமிழகத்தில் வெயிலில் தனக்கு கொரோனா பரவி விடுமோ என பயமாக உள்ளதாகவும், தனக்கு அரசு மருத்துவமனையில் தனி அறை உணவுடன் வேண்டும் இல்லை என்றால் பிரச்சினை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் மாதிரிகள் சேகரிக்கும் நேரம் முடிவடைந்ததையடுத்து, திருப்பூர் ரயில் நிலையம் அழைத்து சென்ற சுகாதார துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகளை சேகரித்து அவரை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, தனிமைப்படுத்தப்பட்ட வீடு என அவரின் வீட்டின் முன்பு சுகாதார துறையினர் நோட்டீசும் ஒட்டியுள்ளனர்.
டெஸ்ட் எடுத்த பிறகு சூர்யா டிக் டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கொரோனா இருப்பதாக கூறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்புபவர்கள் நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும், தங்களை குறிப்பிட்ட நாட்கள் வரை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. பெருந்தொற்றால் மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழ்ந்து வரும் நிலையில், அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.
அதே சமயம் முறையாக பரிசோதனை செய்து கொரோனா இல்லை என முடிவு வந்தவர்கள் குறித்து தவறான செய்தியை அக்கம்பக்கத்தினர் பரப்பாமல் இருப்பதும் பெருந்தொற்று காலத்தில் அரசுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.