சைமா உபைத் என்ற பெண்மணி காஷ்மீரின் முதல் பெண் பவர்-லிஃப்ட்டர் ஆனார். சமீபத்தில் இவர் மாநிலத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் அதிக உடல் எடையை பெற்றிருந்ததாகவும், அவரது கணவர் உபைஸ் ஹபீஸிடமிருந்து உடல் எடையை குறைப்பதிலும், பளு தூக்குவதிலும் எப்படி உத்வேகம் பெற்றார் என்பதைப் பற்றிய தனது பயணத்தை சைமா பகிர்ந்து கொண்டார். இது குறித்து ANI-யுடன் பேசுகையில், "நான் ஜிம்மில் சேர்ந்தபோது எடை அதிகரிப்பால் அவதிப்பட்டேன்.
எனது எடையை குறைக்க என் கணவர் எனக்கு உதவினார். அவர் எனக்கு பயிற்சி அளித்து, பளு தூக்குபவராக என் வாழ்க்கை பாதையை வழிநடத்தினார்." என பெருமிதத்துடன் கூறினார். ஸ்ரீநகரில் பெண்களுக்கான ஜம்மு-காஷ்மீர் பவர் லிஃப்டிங் அசோசியேஷன் முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த போட்டியில், 4 வது காஷ்மீர் பவர் லிஃப்டிங், பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் சாம்பியன்ஷிப்பில் 27 வயதான சைமா உபைத் பதக்கம் வென்றார். இந்த நிகழ்வில் அவர் 255 கிலோ எடையை தூக்கியுள்ளார். அதில் மாநிலம் முழுவதிலுமிருந்து பல பெண்கள் கலந்து கொண்டனர். தனது பயணத்தை நினைவுக்கூர்ந்த அவர், குழந்தைகளைப் பெற்ற பிறகும் பளு தூக்குதலை நான் கைவிடவில்லை என்று கூறினார்.
சமூக அழுத்தங்களுக்கு ஆளாக வேண்டாம் என்று மற்ற பெண்களுக்கு வற்புறுத்திய அவர், சமூகம் என்ன நினைக்கிறதோ அதற்காக தங்கள் சிறகுகளை வெட்டிக் கொள்ளும் பெண்களுக்கு தான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சைமா கணவர் கூறியதாவது, "பவர் லிஃப்ட்டுக்கு அவசியமான இயல்பான வலிமை எனது மனைவியிடம் இருப்பதை நான் கண்டேன். பின்னர் நான் பளு தூக்கும் விளையாட்டின் யோசனையை முன்மொழிந்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். நாங்கள் போட்டிக்குத் தயாராகத் தொடங்கினோம். கடவுளின் கிருபையால் அவர் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார்," என தெரிவித்தார்.
இந்த தம்பதியினர் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் சைமாவின் சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, அவர் ஒருபோதும் கருத்தரிக்க முடியாது என்று மருத்துவர்கள் கணித்திருந்தனர். இருப்பினும், அவர்களுக்கு விரைவில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு, சைமாவுக்கு முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகியுள்ளது. இதனால் அவர் அதிகபடியாக வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால் இந்த தடைகள் அவரது நீண்ட கால ஒர்கஅவுட் குறிக்கோள்களைத் தடுக்கவில்லை. இப்பொது இந்த ஜோடி மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.மேலும் சைமா அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு செய்தியையும் கூறியதாக ANI தெரிவித்துள்ளது. அதாவது, "ஒவ்வொரு கணவரும் தங்கள் மனைவியை சிறந்த நண்பர்களாக கருத வேண்டும். அவர்களுக்கு எல்லா ஆதரவையும் கவனிப்பையும் வழங்க வேண்டும்.
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பெண்கள் தாங்கள் திறமையானவர்கள் என்பதை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் மகள்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதிக்க வேண்டும், "என்று சைமா வலியுறுத்தியுள்ளார். தற்போது சைமா ஸ்ரிங்கரில் பெண்களுக்கான உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் தன்னைப் போன்ற பெண்களுக்கு பயிற்சியளிப்பதற்காக பவர்-லிஃப்ட்டில் தனது திறமைகளை விரைவில் விரிவுபடுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.