கழிவு உற்பத்தி (Waste Production) அதாவது கழிவுகளில் இருந்து மீண்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அவசியத்தை, தேவையை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்கிற காலம் கடந்து விட்டது. ஏனெனில் சுற்றுச்சூழல் - ஆர்வலர்களுக்கானது மட்டுமல்ல, உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்குமானதும் கூட!
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் "உற்பத்தி" செய்யப்படுகின்றன. இப்படியாக நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும் கழிவுகளில் ஒரு சிறிய பங்களிப்பு தான் - சிகரெட் துண்டுகள். பிளாஸ்டிக் அளவிற்கு இல்லையென்றாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் 26,000 டன்களுக்கும் அதிகமான கழிவுகள் சிகரெட் துண்டுகளால் உருவாகுகின்றன, அதுவும் இந்தியாவில் மட்டும்!
இந்நிலைபாட்டில் "இதே சிகரெட் கழிவுகள்" சமாச்சாரத்தின் கீழ், ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் செயல் இணையத்தில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது; வைரல் ஆகி வருகிறது.
அதிகரித்துக் கொண்டே போகும் சிகரெட் கழிவுகள் சார்ந்த சிக்கலை சமாளிப்பதற்கும், தெருக்களில் வீசப்பட்ட சிகரெட் துண்டுகளை சேகரிப்பதற்கும் இந்த ஸ்வீடிஷ் நிறுவனம் ஒரு வழியை கண்டறிந்து உளள்து.
இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் செயல் பெரிய அளவிலான கவனத்தை பெற காரணம், நிறுவனம் நிர்ணயித்த இலக்கால் அல்ல, அதை அடைய அவர்கள் முயற்சிக்கும் விதத்தால்!
கோர்விட் க்ளீனிங் (Corvid Cleaning) என்கிற நிறுவனம், வெகுமதி அடிப்படையிலான அமைப்பின் மூலம், சிகரெட் துண்டுகளை சேகரிக்க காகங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. சிகரெட் துண்டுகளை எடுத்து வந்து, அதற்கு பதிலாக உணவு வழங்கும் ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியானது ஒரு படிப்படியான செயல்முறையாக இருக்கும், பின்னர் முழுமையாக பயிற்சி பெற்ற சில காகங்கள், ஸ்வீடன் நாட்டின் சோடெர்டால்ஜி நகரில் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் "பணியை" தொடங்கும் .
"காக்கைகள் மிகவும் புத்திசாலித்தனமான பறவை என்பதால், இதற்கு காகங்கள் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று நிறுவனம் அவற்றைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தது. மேலும் காகங்களுக்கு இந்நிறுவனம் கற்பிப்பது மிகவும் எளிதான ஒரு செயல் ஆகும். எனவே சொல்லி கொடுக்காமலேயே காகங்கள் ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், காகங்கள் தவறுதலாக குப்பைகளை உண்ணும் அபாயமும் குறையும்” என்று கோர்விட் கிளீனிங்கின் நிறுவனர் கிறிஸ்டியன் குந்தர்-ஹான்சென் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.
முன்னரே குறிப்பிட்டபடி, பயிற்சியளிக்கப்பட்ட காகங்களை உள்ளடக்கிய "ஒரு அமைப்பு"| பெரிய அளவிலான சோதனைக்கு தயாராக உள்ளது என்றும் கிறிஸ்டியன் கூறுகிறார், மேலும் இந்த சோதனைகள் சோடெர்டால்ஜி நகராட்சியில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also read... ஒரே நாளில் 250 பில்லியன் டாலர்களை இழந்த ஃபேஸ்புக் - முக்கியமான 6 காரணங்கள்!
ராய்ட்டர்ஸ், இந்த பயிற்சி பெற்ற காகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்கிற வீடியோவை பதிவேற்றியது. அந்த வீடியோவில், காகங்கள் சிகரெட் துண்டுகளை கடித்து கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் போடுவதையும், அதற்கு வெகுமதியாக அந்த இயந்திரம் வேர்க்கடலையை வழங்குவதையும் பார்க்க முடிகிறது.
நினைவூட்டும் வண்ணம், இதேபோன்ற செயல்முறை கடந்த 2018 ஆம் ஆண்டில் புய் டு ஃபோ (Puy du Fou) என்கிற பிரான்ஸ் ஹிஸ்டோரிக்கல் தீம் பார்க்கில் பயன்படுத்தப்பட்டது, அங்கு காகங்கள் ஒரு சுவையான உணவுவை வெகுமதியாக பெற குப்பை மற்றும் சிகரெட் துண்டுகளை சேகரித்து வந்தன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.