லேப்டாப்பை தொலைத்த பெண் - இளைஞரின் சமயோசித்த சிந்தனை!

மாதிரி படம்

லேப்டாப்பை வைத்து வேலை செய்து வரும் அந்தப் பெண்ணுக்கு, உடனடியாக தொலைந்த லேப் டாப்பை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரயில் பயணத்தின்போது லேப்டாப் தொலைத்த பெண்ணின் அடையாளத்தை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்து, மீண்டும் அந்த லேப்டாப்பை அவரிடமே இளைஞர் ஒருவர் கொண்டு சேர்த்துள்ளார்.

இங்கிலாந்தில் ரயில் பயணத்தின்போது பெண் ஒருவர் லேப்டாப்பை தொலைத்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கிய பிறகு லேப்டாப்பை விட்டுச் சென்றதை அறிந்த அவர், இதுகுறித்து ரயில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை பதிவு செய்து கொண்ட அதிகாரி, லேப்டாப் குறித்து தகவல் தெரிவிக்க 7 நாட்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். ஆனால், லேப்டாப்பை வைத்து வேலை செய்து வரும் அந்தப் பெண்ணுக்கு, உடனடியாக தொலைந்த லேப் டாப்பை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் மன வேதனையடைந்த அந்தப் பெண், புதிய லேப் டாப் வாங்கவும் திட்டமிட்டிருந்தார்.

அந்த நேரத்தில், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட இளைஞர், லேப்டாப் தன்னிடம் இருப்பது குறித்து தகவல் தெரிவித்து, அவரிடம் மீண்டும் ஒப்படைத்துள்ளார். இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை அந்தப் பெண்ணும் தன்னுடைய சமூகவலைதள பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். அந்த இளைஞர், சரியாக அந்த பெண்ணை தொடர்பு கொண்டது எப்படி? என்பது பலருக்கும் கேள்வியாக இருந்துள்ளது.

டையஸி மோரீஸ் (Daisy Morris) என்ற பெண், புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயிலில் செல்லும்போது தவறவிட்ட அவரின் லேப்டாப்பை நிகாத் என்பவர் எடுத்துள்ளார். லேப்டாப்பின் முன்பக்கத்தில் அந்த பெண்ணின் பெயரான டையஸி மோரீஸ் எழுதப்பட்டிருந்துள்ளது. இதனைப்பார்த்த நிகாத், கூகுளில் தேடியுள்ளார். பிரபல வேலை வழங்கும் வெப்சைட்டான LinkedIn -ல் டையஸி மோரீஸின் புரொபைல் இருந்துள்ளது. அந்தப் புரொபைல் மூலம் அவரை தொடர்பு கொண்ட நிகாத், தன்னிடம் இருக்கும் லேப்டாப் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

Also read... இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் முடக்கமா? இனி யூஸ் பண்ண முடியாதா?

மேலும், அதனை திருப்பிக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர், டையஸி மோரிஸிடம் லேப்டாப்பை ஒப்படைத்த நிகாத், அவரின் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதனை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள டையஸி மோரீஸ், நிகாத் குறித்து பெருமையாக எழுதியுள்ளார். லேப்டாப்பை திருப்பிக் கொடுத்ததற்கு கைமாறாக தான் ஏதாவது செய்ய வேண்டுமா? என கேட்டதாகவும், அதனை நிகாத் பெருந்தன்மையாக நிராகரித்துவிட்டு, வழக்கமாக செய்யக்கூடிய ஒன்று தான் என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் பெருமளவில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும் இந்த சூழலில் நிகாத்தின் செயல் தன்னை நெகிழ்ச்சியடைய செய்துவிட்டதாகவும் டையஸி மோரீஸ் கூறியுள்ளார். அதேபோல், நெட்டிசன்களும் நிகாத்தின் செயலுக்கு மனாதார பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அரபியில் நிகாத் என்றால் Generosity என்ற பொருள் உள்ளதாகவும், அதற்கேற்ப அவர் நடந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: