இன்றைய நமது பிஸியான வாழ்க்கை பயணத்திற்கு ஆன்லைன் டாக்ஸி சேவைகள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. வீட்டை விட்டு வெளியே வந்து தெரு முக்கத்தில் அல்லது பிரதான சாலை அருகே டாக்ஸி ஏதேனும் நிற்கிறதா என்று நீங்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் இருக்கும் இடம் அலுவலகம், தியேட்டர், பூங்கா என எதுவாக இருந்தாலும் சரி. இருந்த இடத்தில் இருந்தபடியே டாக்ஸி புக்கிங் செய்து, அடுத்த சில நொடிகளில் பயணத்தை தொடங்கி விடலாம். ஆனால், தினசரி டாக்ஸி சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு இந்தியரையும் கேட்டுப் பாருங்கள். அடிக்கடி தங்களுக்கு நிகழும் கசப்பான அனுபவம் குறித்த கதைகளை அடுக்கடுக்காக சொல்வார்கள்.
நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு டாக்ஸி டிரைவர் திடீரென உங்கள் டிரிப்பை ரத்து செய்து விடுவார். அல்லது வெகு நேர தாமதத்திற்குப் பிறகு வந்து சேருவார். சில சமயம், வாடிக்கையாளரை சந்தித்த பிறகு, அவர்கள் செல்ல வேண்டிய இடத்தைக் கேட்டதும், அங்கெல்லாம் வர முடியாது என கூறி டிரிப்பை ரத்து செய்வார்கள்.
சில சமயம், வாடிக்கையாளர் டாக்ஸி டிரைவரை தொடர்பு கொள்ளும்போது, இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய சூழலில், வாடிக்கையாளர் சற்று கோபமாகி, “இப்போ வருவீர்களா, மாட்டீர்களா, முடியாது என்றால் சொல்லி விடுங்கள்’’ என்று டென்ஷன் ஆகும் கதைகளும் இங்கு சகஜம் தான்.
உண்மை சொல்லி மனம் கவர்ந்த டிரைவர்
சமீபத்தில் கரிஷ்மா மெஹ்ரோத்ரா என்ற பெண் ஊபர் டாக்ஸி சேவைக்கு புக் செய்தார். குறித்த நேரத்தில் கார் வந்து சேரவில்லை என்பதால் டிரைவருக்கு அவர் மெசேஜ் அனுப்பினார். அதற்கு டிரைவர் அளித்த பதில் தான், அந்தப் பெண்ணின் மனதை நெகிழ செய்துள்ளது.
Also see... 23 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக வாசித்த சிறுமி....
அந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் பதிவை டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். டிரைவர் அளித்த பதிலில், “100 சதவீதம் நான் வந்து விடுவேன். நான் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் தான் மீதமிருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். வாடிக்கையாளரை சந்தித்த பிறகும், நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார் அவர்.
டிரைவரின் நேர்மையை வெகுவாகப் பாராட்டியுள்ள வாடிக்கையாளர், இத்தகைய நேர்மையை தன் வாழ்நாள் முழுவதும் அடைய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் இவரது பதிவு வைரல் ஆகி வருகிறது. டிரைவர் சொன்னபடி வந்து சேர்ந்தாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இன்னும் பலர் டிரைவரின் நேர்மை பாராட்டுக்கு உரியது என்று தெரிவித்தனர். அதே சமயம், விஷ்வா ரஞ்சன் என்ற பதிவாளர் நையாண்டியாக பதிவு செய்துள்ள கமெண்டில், “பரோட்டாவை பாதியில் விட்டு வருவது ரொம்பக் கஷ்டம்’’ என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.