உலகெங்கிலும் கொரோனா காலம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. குறிப்பாக, அலுவலக வேலைகள் பலவும் ஸ்தம்பித்தன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்களில், பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய ஏற்பாடு செய்ததன் மூலமாக நிலைமையை ஓரளவுக்கு சமாளித்து வந்தனர்.
இதுமட்டுமின்றி, முறையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட பணியாளர்களை வைத்து, சமூக இடைவெளி, கட்டாய மாஸ்க், சானிடைசர் போன்ற கட்டுப்பாடுகளுடன் சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இக்கட்டான சூழலிலும் நிறுவனத்திற்கு உறுதுணையாக நின்று கடமையாற்றிய பணியாளர்களை சில நிறுவனங்கள் ஊக்குவிக்க தவறவில்லை.
இது போன்ற ஒரு நிகழ்வு, பிரிட்டனை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றில் நடைபெறுகிறது. அங்குள்ள வேல்ஸ் மாகாணத்தில் ‘யோக் ரெக்ரூட்மெண்ட்’ என்ற பெயரில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக 4 நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல இந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தில் பணியாற்றும் 55 ஊழியர்களையும் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெனரிஃப் தீவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் யூரோ (அதாவது ரூ.1 கோடிக்கும் மேல்) வரையில் செலவு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
யோக் ரெக்ரூட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழியர்கள் அனைவரும் டெனரிஃப் தீவுகளுக்கு பறக்க இருக்கின்றனர். எல்லோருமே! நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, 2021ஆம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை கடந்து வர உதவிய ஒவ்வொருவரும். எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்ற கலாச்சாரத்தை கட்டமைப்பதே நமது நோக்கமாகும். அதாவது, நிறுவனத்தின் விடுமுறை கொண்டாட்டத்தில் யார் ஒருவரையும் விட்டு விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... லாட்ஜில் தோழியுடன் தங்க மனைவியின் ஆதார் அட்டையை வழங்கிய ஜகஜால கில்லாடி!
யோக் ரெக்ரூட்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை கமர்சியல் அதிகாரி பவன் அரோரா இதுகுறித்து கூறுகையில், “2020ஆம் ஆண்டு என்பது ஒட்டுமொத்த தொழில் துறைக்கும் மிக சவாலான காலகட்டமாக இருந்தது. எங்கள் பணியாளர்கள் அனைவரும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து பணிபுரிய நேர்ந்தது. அதற்குப் பிறகு மீண்டும் நகர்ப்புற பகுதிக்கு வந்தனர். மீண்டும் கிராமப்புற பகுதிக்கு செல்ல நேர்ந்தது. ஆகவே, ஒவ்வொருவரின் தோள் மீதும் கை போட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் செய்த பணிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்’’ என்று கூறினார்.
இந்த விடுமுறை கொண்டாட்டப் பயணம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதுகுறித்த செய்தி, பல்வேறு செய்தி நிறுவனங்கள் மூலமாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் அடித்து வருகிறது. செய்தியின் கீழே கமெண்ட் செய்யும் ஒவ்வொரு பதிவரும், தங்கள் நிறுவனத்திலும் இதுபோன்று சுற்றுலா அழைத்துச் செல்வார்களா என்ற ஆவலுடன் கருத்துளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.