சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட திருமணம் தொடர்பான வீடியோ நெட்டிசன்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. 45 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்தது.
வீடியோவில், திருமண விழாவில் மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் மேடையில் புகைப்படம் எடுக்க நிற்கின்றார்கள். புகைப்படக்காரர் மணமகனை விட்டுவிட்டு மணமகளை மட்டும் புகைப்படம் எடுக்கிறார். அதேநேரம், மணமகளின் நாடியை தொட்டு புகைப்படம் எடுக்கிறார். இதனை சில வினாடிகள் பொறுத்துப் பார்த்த மணமகன் திடீரென கோபமாக புகைப்படக்காரரின் முதுகில் ஓங்கி ஒரு அடியை வைக்கிறார். `உங்களால் அங்கிருந்து புகைப்படம் எடுக்க முடியாதா’ என்று கேட்கிறார். இதனைப் பார்த்த மணமகள் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்த இந்த வீடியோவை ட்விட்டர் பயனர் ஒருவர் `ஐ ஜஸ்ட் லவ் திஸ் பிரைட்’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 8 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பார்த்துள்ளனர். 65,000-க்கும் மேற்பட்ட நபர்கள் லைக் செய்துள்ளனர். 15,000-க்கும் மேற்பட்டவர்கள் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.
`தி வைஃப் இஸ் லெஜண்ட், அங்கிருந்த சூழலை மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளனர், போட்டோகிராபர்ஸ் பிவேர்” போன்ற கமெண்டுகளை நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு பதிவிட்டு வந்தனர்.இதுதொடர்பான மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலாகின .
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து மணப்பெண் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த திருமண மேடை வீடியோ, தான் நடித்த திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி. இந்த வீடியோவை பகிர்ந்தவருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மணப்பெண் கோலத்தில் வைரலான பெண்ணின் பெயர் அனிக்ரித்தி சவுகான். இவர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை. வைரலாக இணையத்தில் பரவிய வீடியோ குறித்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்த நடிகை தான் நடித்த படத்தின் பெயரைக் குறிப்பிட்டு வைரலாக பரவிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.