Home /News /trend /

புயலில் மரம் சாய்ந்து விழுந்து டபுள் டெக்கர் பேருந்து சேதம் - வீடியோ பாருங்க

புயலில் மரம் சாய்ந்து விழுந்து டபுள் டெக்கர் பேருந்து சேதம் - வீடியோ பாருங்க

டபுள் டெக்கர் பேருந்து சேதம்

டபுள் டெக்கர் பேருந்து சேதம்

யூனிஸ் புயலால் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மரம் சாய்ந்தது, கட்டடம் இடிந்தது மற்றும் சூறாவளிக் காற்று மூலமாக ஏற்பட்ட இதர விபத்துகள் மூலமாக பிரிட்டனில் 13 பேர் பலியாகினர்.

கடந்த சில நாட்களாக பிரிட்டனை யூனிஸ் புயல் புரட்டிப் போட்டு வருகிறது. கடும் சூறாவளிக் காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மணிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் வீசும் யூனிஸ் புயல் காரணமாக எண்ணற்ற வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, சாலையில் வாகனங்கள் செல்லும்போது திடீரென சாயும் மரங்களால் மிகுந்த சேதம் ஏற்படுகிறது.

புரோம்லே பகுதியில் உள்ள கேட்ஃபோர்டு பிரிட்ஜ் என்ற இடத்தில் புயல் தொடர்பான பாதிப்புகளை வாகனத்தில் பயணித்தபடி படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே டபுள் டக்கர் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று திடீரென பேருந்து மீது சாய்ந்து விழுந்தது. மரம் சாய இருப்பதை கவனித்து, பேருந்தின் வேகத்தை குறைப்பதற்கான கால அவகாசம் எதுவும் அப்போது இல்லை. இதனால், மரத்தை உடைத்துக் கொண்டு பேருந்து பாய்ந்து சென்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுமையாக சேதம் அடைந்துவிட்டது.



யூனிஸ் புயலால் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மரம் சாய்ந்தது, கட்டடம் இடிந்தது மற்றும் சூறாவளிக் காற்று மூலமாக ஏற்பட்ட இதர விபத்துகள் மூலமாக பிரிட்டனில் 13 பேர் பலியாகினர். பிரிட்டன் மட்டுமல்லாமல் நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் யூனிஸ் புயலின் தாக்கம் இருக்கிறது. பிரிட்டனில் 2 லட்சம் குடும்பங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள அவசர சேவைகள் துறை தெரிவிக்கிறது.

பிரிட்டனில் மின் விநியோகத்தை நிர்வகித்து வரும் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், அங்கு 1 மில்லியன் குடும்பங்களுக்கான மின் இணைப்புகள் சேதம் அடைந்துள்ளன என்று தெரிவிக்கின்றனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் மக்களுக்கு டிவிட்டர் மூலமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட செய்தியில், “பிரிட்டனுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இந்த அறிவுரையை பின்பற்றி, நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also read... கச்சோரி வாங்க ரயிலை நிறுத்திய டிரைவர் சஸ்பெண்ட் ஆன பரிதாபம்



முன்னதாக, யூனிஸ் புயல் காரணமாக பிரிட்டனில் கடந்த வாரம் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹீத்ரு விமான நிலையத்தில் விமானங்களை தரை இறக்குவதிலும், விமானங்களின் புறப்பாடுகளிலும் சிக்கல் நிலவியது. இதனால், பல்வேறு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending Videos

அடுத்த செய்தி