பிஸ்கட் கவரில் 'திருடன்' புகைப்படம் - பேக்கரி கடைக்காரரின் Smart ஐடியா!

பிஸ்கட் கவரில் 'திருடன்' புகைப்படம்

கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் கைவரிசை காட்டிய கும்பலைச் சேர்ந்த ஒருவனின் புகைப்படம் கிடைத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் கைவரிசை காட்டிய திருடனின் புகைப்படத்தை, உரிமையாளர்கள் பிஸ்கட் கவரில் அச்சடித்து வாடிக்கையாளர்களிடம் கொடுத்ததில் திருடன் பிடிப்பட்டான்.

அமெரிக்காவில், வாஷிங்டன் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த மாதம் புகுந்த திருட்டு கும்பல் ஒன்று கைவரிசை காட்டியுள்ளது. கடையில் இருந்த நொறுக்குத் தீனிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். அடுத்த நாள் கடைக்கு சென்று பார்த்த கடையின் உரிமையாளருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் கைவரிசை காட்டிய கும்பலைச் சேர்ந்த ஒருவனின் புகைப்படம் கிடைத்தது.

தெளிவாக இல்லை என்றாலும், அடையாளம் காணும் வகையில் ஓரளவுக்கு இருந்துள்ளது. காவல்நிலையத்தில் புகார் அளித்த பேக்கரி கடை உரிமையாளர்கள், திருடர்களை பிடிக்க வித்தியாசமான யுக்தி ஒன்றை கையாண்டனர். தங்கள் பேக்கரியில் தயாரிக்கப்படும் பிஸ்கட் பாக்கெட்டில் சிசிடிவியில் பதிவான திருடனின் புகைப்படத்தை அச்சிட்டனர். அந்த பிஸ்கட் பாக்கெட்டின் கவரில் திருடன் புகைப்படத்துக்கு மேல் 'Take a Bite Out of Crime' என்ற வாசக்கதையும் இடம்பெறச் செய்தனர்.

அதாவது, அவர்கள் கடையில் இந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள், திருடனைக் கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த ஐடியாவை முயற்சி செய்தனர்.

மே 1ம் தேதி தங்களின் முகநூல் பக்கத்தில் புதிய பிஸ்கட் கவர் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் திருடனின் புகைப்படம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர். மே 2ம் தேதி முதல் அந்த பிஸ்கட் கடையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறினர். பிஸ்கட் கவரின் மேல் இருக்கும் திருடனைக் கண்டால் தகவல் தெரிவிக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஏற்கனவே அறிவித்தப்படி, மே 2ம் தேதி முதல் திருடன் புகைப்படம் இருக்கும் பிஸ்கெட்டின் விற்பனையையும் தொடங்கினர். அவர்களின் இந்த முயற்சி வீண்போகவில்லை. கைமேல் பலன் கிடைத்ததுபோன்று பிஸ்கட் வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் முகநூலில் பேக்கரியின் போஸ்டை பார்த்தவர்கள் என பலரும் காவல்துறையிடம் புகார்களை அளித்துள்ளனர். ஒருவார இடைவெளியில் பேக்கரி கடையில் திருடிய திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Also read... வெறும் ரூ.1.5 லட்சத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர் - காரணம் என்ன தெரியுமா?

இந்த திருட்டில் அவருடன் இணைந்து ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடையில் திருடிய திருடர்களை பிடிக்க பேக்கரி உரிமையாளர்கள் பயன்படுத்திய வித்தியாசமான ஐடியா, பலரையும் கவர்ந்தது. பேக்கரியின் உரிமையாளர்கள் காரன் (Karen) மற்றும் எரிக் கிரெய்க் (Eric Kreig) ஆகியோர் இது குறித்து பேசும்போது, கடையில் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

சிசிடிவியில் குற்றவாளிகளின் புகைப்படம் இருந்ததால், அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு காவல்துறையில் புகார் அளித்ததாக கூறினர். மேலும், கடையில் தயாரிக்கப்படும் பிஸ்கட் கவரில் திருடன் புகைப்படத்தை அச்சிட்டால், தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என நினைத்ததாகவும், அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: