பலரும் விரும்பி சாப்பிட கூடிய சிற்றுண்டி வகைகளில் மோமோஸ் என்கிற ஸ்நாக்ஸும் மிகவும் பிரபலமானது. இது ஒரு சுவையான உணவு என்பதால் இந்தியாவில் மிகவும் பிரபலமான தெரு உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஆவி காட்டி வேகவைத்த மோமோஸ், பொரித்த மோமோஸ், வெஜ் மோமோஸ், சிக்கன் மோமோஸ், மட்டன் மோமோஸ் என பல்வேறு வகையான மோமோஸ் இன்று கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியர்கள் மற்ற சிற்றுண்டி வகைகளை போன்றல்லாமல் இந்த மோமோஸிற்கு சமீப காலமாக முக்கிய இடத்தை தந்து வருகின்றனர்.
இருப்பினும், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு ஒரு சிலர் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன எய்ம்ஸ் (AIIMS) இந்தியாவின் பிரியமான சிற்றுண்டியாக மாறியுள்ள மோமோஸ் குறித்த ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மோமோஸ் சாப்பிட்டு மூச்சுத்திணறல் காரணமாக 50 வயது முதியவர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து இதை வெளியிட்டுள்ளனர். எய்ம்ஸ் வழங்கிய அறிவுரையின்படி, மோமோஸ் போன்ற உணவு வகைகளை சாப்பிடும் போது அனைவரும் மிக ‘கவனமாக விழுங்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளது.
எய்ம்ஸில் உள்ள தடயவியல் நிபுணர்கள் அந்த நபரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்தனர். அதில் மோமோஸ் சாப்பிடும் போது அதை அப்படியே விழுங்கியதால் அவர் இறந்ததாக கூறியுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், சாலையோர கடையில் மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மோமோஸ் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென அவர் தரையில் சரிந்து விழுந்துள்ளார்.
Also Read :
பள்ளியில் 26 முறை ஃபெயிலான நபருக்கு மாலை அணிவித்து மரியாதை
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரின் மூச்சுக்குழாயின் முகப்பில் ஒரு மோமோ சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குரல்வளை வாயிலில் மாண்டிக் கொண்ட மோமோஸ் மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட நியூரோஜெனிக் கார்டியாக் அரெஸ்ட் என்பது தான் இவரின் இறப்பிற்கான காரணமாக அறியப்பட்டது. இந்த மிக அரிதான சம்பவம் என்று ஜர்னல் ஆஃப் ஃபோரன்சிக் இமேஜிங் பத்திரிகை அதன் சமீபத்திய பதிப்பில் வெளியிட்டுள்ளது. மோமோஸ் தொடர்பான மற்றொரு வினோதமான சம்பவம் மும்மையில் நடந்துள்ளது.
இந்த திபெத்திய-நேபாள சிற்றுண்டியான மோமோஸிற்காக மும்பையில் இரு குழுக்களிடையே பெரும் சண்டை ஏற்பட்டது. மும்மை நகரின் போவாய் பகுதியில் மோமோஸ் விற்பனை செய்யும் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோசமான சண்டை இணையத்தில் வைரலானது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி, இரவு 11 மணியளவில் போவாயில் உள்ள சங்கராச்சார்யா மார்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தது. இந்த விவகாரத்தை போலீசார் கையில் எடுத்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை படிக்கும் யாராக இருந்தாலும், மோமோஸால் உருவான இரு வேறு துக்கமான நிகழ்வுகள் குறித்த பெரிய கேள்வி உருவாக வாய்ப்புள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.