கணக்கிடவே முடியாத பல ஆச்சரியங்களை கொண்டது தான் இந்த பிரபஞ்சம். பல நூறு சூரியன்களையும், பல ஆயிரம் கிரகங்களையும் உள்ளடக்கியது தான் பிரபஞ்சம். அந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான் நாம் வாழும் பூமி. நாம வாழும் பூமியின் வயதை உங்களால் கணிக்க முடியுமா?சொன்னால் நம்ப மாட்டீர்கள். கிட்டத்தட்ட 450 கோடி ஆண்டுகள் ஆகிறதாம் நம் பூமி உருவாகி. எத்தனையோ கால நிலை மாற்றங்களை தாங்கி இன்று வரை சுற்றிக் கொண்டிருக்கிறது நம் பூமி. அதன் சுற்றும் ஒரு நாளைக்கு நிற்கத்தான் போகிறது.
பூமியில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம் என்று தத்துவம் போசிகிறோமே, இந்த பூமியே ஒரு நாள் இறக்கத்தான் போகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த பூமியின் முடிவு எப்படி நிகழப் போகிறது என்பதையும் ஓரளவு கணித்திருக்கிறார்கள்.
பூமியின் அழிவு எப்படி இருக்கும் என்பது குறித்து பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யாராலும் தீர்க்கமான முடிவிற்கு வரமுடியவில்லை. ஆனால் இப்போது கிட்டத்தட்ட பூமியின் அழிவு குறித்து ஓரளவு நம்பகமான தோராயமான முடிவிற்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமியை அழிக்கப் போவது வேறு யாருமல்ல நமது சூரியனே தான். இந்த முடிவையும் ஏனோதானோ என்று எடுக்கவில்லை விஞ்ஞானிகள். இனி நடக்கப்போகும் வேறு ஒரு கிரகத்தின் அழிவை வைத்து தான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Read More : ''நான் பதவி விலகணுமா.. ஓட்டு போடுங்க..'' ட்விட்டரில் பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!
ஏற்கனவே சொன்னது போல, பல நூறு சூரியன்களையும், பல ஆயிரம் கிரகங்களையும் உள்ளடக்கியது தான் பிரபஞ்சம். அந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான் நாம் வாழும் பூமி. பூமியைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற கிரகங்களை எல்லாம் எக்ஸோ பிளானட் என அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகம் தான் அதாவது எக்ஸோ பிளானட் தான் கெப்ளர் 1658-B. அந்த கிரகம் அதாவது கெப்ளர் 1658-Bஇப்போது அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. கெப்ளரின் ஒவ்வொரு அசைவையும், நிகழ்வையும் உற்று நோக்கி வருகிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்த கிரகம் தனக்கான சூரியனை சுற்றிய ஒரு சிதைவு சுற்றுப்பாதையில் உள்ளது. ஒருகட்டத்தில் அந்த கிரகம் சூரியனோடு மோதி அழிந்தும் போக வாய்ப்பு உள்ளது. ஆக ஒரு கிரகத்தின் அழிவு அந்த கிரகத்தின் அருகில் இருக்கும் சூரியனால் தான் ஏற்படும் என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதே போல், நமது பூமியும் கூட இப்படித்தான் அழியும் என்கிற தோராயமான முடிவையையும் எட்டியிருக்கிறார்கள் . ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமையின் முந்தைய ஆய்வொன்றின்படி சூரிய மண்டலமானது அதன் கடைசி காலத்தில் இருக்கும் போது நமது சூரியன் தன் அருகிலுள்ள கிரகங்களை மூழ்கடிக்கும். அதன்படி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகங்களான மெர்குரி, வீனஸ் மற்றும் பூமி போன்ற கிரகங்கள் சூரியனால் விழுங்கப்படும் எனக் கூறியிருக்கிறது அந்த ஆய்வு முடிவு.
பூமி உருவான பிறகு, ஏறக்குறைய 8 பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் சூரியன் அதன் உச்சக்கட்ட வெப்பநிலையை அடையுமாம். அதன் பிறகு சூரியன், தனது மேற்பரப்பு வெப்பநிலையை குறைத்துக்கொண்டு பிறகு தன் வெப்பத்தின் அளவை பல மடங்கு அதிகரிக்குமாம். இந்த மாற்றத்தின் போது சூரியன் - ஒரு சிவப்பு ராட்சனாக மாறியிருக்குமாம். அப்போது பூமியையும் சேர்த்து தன் அருகிலுள்ள கிரகங்களை விழுங்குமாம் சூரியன். இப்படித் தான் பூமியின் அழிவு இருக்கும் என கணித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கேட்கவே பயமாக இருக்கிறது. இதில் ஒரே ஒரு ஆறுதல் இந்த பயங்கரம் நாம் வாழும் நாட்களில் நடக்கப் போவதில்லை. அதற்கு இன்னும் பல கோடி ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் அப்போதிருக்கப் போகும் நமது சந்ததிகளுக்காக இப்போது வருத்தப்பட்டுக் கொள்வோம். வேறு என்ன செய்வது?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.