திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் அது நடைபெறும் விதமும் வித்தியாசமாக இருந்தால் சொல்லத் தான் வேண்டுமா.? ஆகாயத்தில் ஆரம்பித்து கடலுக்கு அடியில் வரை திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை ஏராளமாக பார்த்திருப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாடாய்படுத்தியதால், தேவாலயங்கள், மசூதிகள், திருமண மண்டங்கள் அனைத்தும் களையிழந்தது.
அதேசமயத்தில் ஆன்லைன் சூடுபிடிக்க ஆரம்பித்தது. காரணம் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான தம்பதிகள் ஜூம் கால், கூகுள் மீட், ஃபேஸ்புக் லைவ், பிளாக் செயின், மெட்டாவர்ஸ் என டிஜிட்டல் தளங்களே திண்டாடும் வகையில் விதவிதமாக திருமணம் செய்து கொண்டனர். இப்போது கொரோனா குறைத்துவிட்டதால், உலகமே மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீண்டும் ஆடம்பர திருமண கொண்டாட்டங்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. தற்போது நாம் விமானத்தில் நடத்த வித்தியாசமான திருமணத்தையும், அதற்கு பின்னால் உள்ள கதையைப் பற்றியும் தான் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
சவுத்வெஸ்ட் ஏர்லைன் தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வித்தியாசமான திருமணம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வேகாஸ் செல்வதற்காக பாம் மற்றும் ஜெர்மி என்ற ஜோடி விமானத்தில் ஏறியுள்ளனர். இவர்கள் வேகாஸில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வேகாஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் இவர்களுக்கு திருமணம் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. அதற்காக இருவரும் டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து இணைப்பு விமானம் மூலமாக வேகாஸுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் வேகாஸுக்கு செல்வதற்கான அவர்களுடைய இணைப்பு பிளைட் ரத்து செய்யப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த ஜோடியை அங்கிருந்த மற்றொரு பயணியான கிறிஸ் என்பவர் தேற்றினார். உடனடியாக ஆன்லைனில் சவுத் வெஸ்ட் விமானத்தில் வேகாஸ் செல்ல கடைசியாக இருந்த 3 டிக்கெட்டுக்களை வாங்கினர். விமானத்திலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கிறிஸ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பாம் மற்றும் ஜெர்மி இருவரும் தங்களது திருமண ஆடையுடன் சவுத் வெஸ்ட் விமானத்தில் ஏறியுள்ளனர்.
Also Read : சூட் அணிந்த கொரிய மாப்பிள்ளை; சேலை அணிந்த இந்திய மணப்பெண் - வைரல் ஆகும் திருமண வீடியோ!
இதை பார்த்து ஆச்சர்யப்பட்ட விமான கேப்டன் மணப்பெண்ணிடம் விவரங்களை கேட்டறிந்துள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் விமானத்திலேயே திருமணம் நடத்தி வைக்க விமான ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர். விமானத்தில் இருந்த டிஸ்யூ பேப்பர்களைக் கொண்டு பணிப்பெண்கள் மணப்பெண்ணுக்கு அழகிய மலர் கொத்தை செய்து கொடுத்துள்ளனர். மேலும் விமானப் பணிப்பெண்ணில் ஒருவர் ஜெர்மிக்கு மணப்பெண் தோழியாகவும் இருந்துள்ளார். கேப்டன் ஜில், மற்றொரு விமானி மற்றும் பயணிகள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி கணவன் மனைவியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : பிரிய மனமில்லை.. வேறு வழியில்லை.. நெட்டிசன்களை நெகிழ வைக்கும் ஏர்ஹோஸ்டஸ்ஸின் வைரல் வீடியோ
விமானத்தில் உற்சாகமாக நடந்த இந்த திருமணம் பற்றி போட்டோக்களுடன் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவை இதுவரை 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கமெண்ட் மற்றும் லைக் செய்துள்ளனர். அதேபோல் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.