முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / திருடிய கொரோனா தடுப்பூசிகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

திருடிய கொரோனா தடுப்பூசிகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

மன்னிப்பு கடிதம்

மன்னிப்பு கடிதம்

சில பகுதிகளில் கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகள் கள்ளச்சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஹரியானாவில் அரசு மருத்துவமனையில் திருடிய தடுப்பூசிகளை மன்னிப்பு கடிதத்துடன் திருடர்கள் மீண்டும் கொண்டுவந்து கொடுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை கொடூரமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமலும், உயிர்க்காக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் அலைந்து வருகின்றனர். இதனிடையே, சில பகுதிகளில் கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகள் கள்ளச்சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹரியானாவில் ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, ஜின்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த ஸ்டோர் ரூம் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த பெட்டிகளை பார்த்த திருடர்கள், பெரிய பொருள் கிடைத்ததாக நினைத்து அனைத்து பெட்டிகளையும் திருடிச் சென்றனர். அடுத்த நாள் துப்புரவு பணியாளர் கூறியதன் அடிப்படையில் அந்த ரூமுக்கு சென்று பார்த்த மருத்துவர்கள், ஒட்டுமொத்த மாவட்டத்துக்கும் அளிக்க அங்கு வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு 1,710 டோஸ்களையும் திருடர்கள் திருடிச் சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர். இதனையடுத்து, காவல்நிலையத்துக்கு அருகில் இருக்கும் டீக்கடை ஒன்றில் திருடிச் சென்ற கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை கொண்டு வந்து வைத்த திருடர்கள், அதில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், திருடிய பொருட்கள் தடுப்பூசிகள் எனத் தெரியாது, மன்னிக்கவும் எனக் கூறியுள்ளனர்.

Also read... டேட்டிங் ஆப்பில் கிடைத்த பிளாஸ்மா - கோவிட் நோயாளிக்கு நெகிழ்ச்சி சம்பவம்!

டீக்கடை மற்றும் அருகில் இருக்கும் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திருடர்கள் திருடிய அந்த அறையில் லேப்டாப் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் இருந்துள்ளது. அந்த லேப் டாப் மற்றும் பணத்தை அவர்கள் எடுக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 104 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மக்கள் பொதுவெளியில் நடமாட வேண்டாம் என மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரப் பணியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Corona Vaccine, Thieves