ட்விட்டர் நிறுவனத்திற்கு இதுவரை கிடைத்த பிரபலத்தை விட, அந்த நிறுவனத்தை உலக பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய பிறகு கிடைத்த பிரபலம் மிகப் பெரியது. நாளொரு செய்தி, தினமொரு சர்ச்சை என ட்விட்டர் தொடர்பான செய்திகளை லைவ் ஆகவே வைத்திருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தின் போலிக் கணக்குகள் தொடர்பாக கேள்வி எழுப்பி சர்ச்சை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அது இன்னும் முடியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பயனர்களை தனது ஒரு ட்வீட் மூலம் உசுப்பி விட்டார் எலான் மஸ்க். தான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் தொடர வேண்டுமா என தங்கள் கருத்தை பதிவிடுமாறு ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டார் அவர்.
அதோடு, பயனர்களின் கருத்துக்கு தான் மதிப்பளிப்பேன் எனவும் கூறியிருந்தார். இது தொடர்பாக கிட்டத்தட்ட ஒரு கோடியே 70 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் 57 விழுக்காடு பேர் எலன் மஸ்க பதவி விலகவேண்டும் எனக் கருத்து கூறியிருந்தனர். அதனால் எலன் மஸ்க் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் சிலர் அவர் வாயை கிளற ஆரம்பித்துள்ளனர். அதில் ஒருவர் தான் அமெரிக்காவில் வாழும் சிவா அய்யாதுரை என்கிற தமிழர்.
சாதாரணமாக சிவா அய்யாதுரை என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றால் அனைவருக்கும் தெரியும் இவரை.
ஆம் தனது பதிநான்கு வயதில் இ-மெயிலை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார் சிவா அய்யாதுரை. இவர் எம்ஐடியில் நான்கு பட்டங்கள் பெற்றுள்ளார். அதோடு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அவர், தான் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு வர விரும்புவதாக எலன் மஸ்கிற்கு ட்விட்டர் மூலம் தனது விருப்பத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
எலன் மஸ்க் எப்படிப்பட்டவர் என்பது சிவாவிற்கு தெரியாதா என்ன?. அதனால் தான் தன்னை இ-மெயில் இன்வென்டர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதோடு, தான் பெற்ற பட்டங்கள் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளதோடு, ஏழு வெற்றிகரமான மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கிய சாதனையையும் குறிப்பட்டுள்ளார் சிவா. அதற்கும் மஸ்க் இன்னும் பதில் சொல்லவில்லை. சிவா அய்யாதுரையின் ட்விட்டர் பதிவையும் ட்விட்டர் பயனர்கள் விட்டு வைக்கவில்லை.
Dear Mr. Musk(@elonmusk):
I am interested in the CEO position @Twitter. I have 4 degrees from MIT & have created 7 successful high-tech software companies. Kindly advise of the process to apply.
Sincerely,
Dr. Shiva Ayyadurai, MIT PhD
The Inventor of Email
m:1-617-631-6874
— Dr.SHIVA Ayyadurai, MIT PhD. Inventor of Email (@va_shiva) December 24, 2022
பலர் சிவாவின் விருப்பத்தை பாராட்டும் அதே நேரம் சிவாவை பங்கமாக சிலர் கலாய்த்தும் வருகிறார்கள். கிருக் ஆட்ரி என்பவர் சிவாவின் ட்விட்டிற்க்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார். எலன் மஸ்கிடம் வேலைக்குச் சேர்ந்தால் அவர் கடைசியாகத்தான் நீங்கள் வாங்கிய பட்டங்களை பார்ப்பார் என்று ரியாக்ட் செய்திருக்கிறார். அதாவது எலன் மஸ்கிற்கு படிப்பெல்லாம் இரண்டம் பட்சம் தான் என்க குறிப்பிட்டுள்ளார். அது போல் மற்றொருவர், நீங்கள் படிப்பெல்லாம் குறிப்பிட்டுள்ளதால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை, சிவா அய்யாதுரையின் விருப்பத்தை எலன் மஸ்க் ஏற்றுக் கொண்டால் கூகுளைப் போல மற்றொரு சமூக வலைதள ஜாம்பவானின் தலைமைப் பதவியில் ஒரு தமிழர் அமரக் கூடும்…. ரிஸ்க் எடுப்பாரா மஸ்க்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.