லாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு! - வைரல் வீடியோ..

viral video

ஷட்டரை சாத்திவைத்துக்கொண்டு வியாபாரம் செய்த கடைக்காரர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ள போதிலும் கடையில் வியாபாரம் தடையில்லாமல் நடப்பதற்காக ஷட்டரை பூட்டிவைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை அனுமதித்த கடைக்காரருக்கு போலீசார் தக்க வகையில் பாடம் புகட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சுனாமி போன்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாவது அலை கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதே போல உயிரிழப்புகளும் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. நாள்தோறும் 4,000க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த இக்கட்டான நிலையின் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் மக்கள் இன்னலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டமாக ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.

என்ன தான் லாக்டவுன் என்றாலும் திருமணம் போன்ற விஷேசங்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருமணத்தை சிம்பிளாக நடத்த மனமில்லாத சிலர் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் எப்படியாவது தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளும் மனநிலையில் தான் உள்ளனர். இவர்களுக்காகவே சில கடைக்காரர்கள் முன் வாசலை அடைத்துவிட்டு, பின் வாசலை திறந்து வைத்து வியாபாரம் பார்த்து வருகின்றனர். சில கடைக்காரர்கள் ஷட்டரை அடைத்து வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை பூட்டி வைத்து வியாபாரம் பார்த்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தின் தாத்தியா பகுதியில் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இருப்பினும் ஷட்டரை சாத்திவைத்துக்கொண்டு வியாபாரம் செய்த கடைக்காரர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.திருமணத்திற்காக துணிகளை வாங்க வந்த குடும்பத்தினரை கடைக்குள் அனுமதித்த கடைக்காரர்கள் ஷட்டரை சாத்தி வைத்துக் கொண்டு வியாபாரம் பார்த்து வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ஷட்டரை திறந்து கடைக்காரரை பிடித்து இழுத்துச் செல்கிறார். ஆனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட திருமணத்திற்காக ஆடை வாங்க வந்த குடும்பத்தினர் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து ஓடிச் செல்கின்றனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

லாக்டவுன் என்பது கசப்பு மருந்து போன்றது. கூடுமானவரை வெளியே செல்வதை தவிர்த்து அத்யாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அரசாங்கங்கள் கோரிக்கை வைக்கின்ற நிலையில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு கொடிய கொரோனாவை விரட்டுவதில் பொதுமக்களும் அரசுக்கு ஆதரவு தரவேண்டிய நேரமிது என வலைத்தள வாசிகள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

 
Published by:Arun
First published: