Home /News /trend /

கரடி நிற்கும் தடுப்பு வேலிக்குள் 3 வயது குழந்தையை வீசிய தாய் - அடுத்து நடந்தது என்ன?

கரடி நிற்கும் தடுப்பு வேலிக்குள் 3 வயது குழந்தையை வீசிய தாய் - அடுத்து நடந்தது என்ன?

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : ஊழியர்கள் விரைந்து வந்து, அகழிக்குள் இருந்த கூண்டுக்குள் கரடியை விரட்டியடித்த நிலையில், அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

பொதுவாக உயிரியல் பூங்காங்களுக்கு செல்லும் நம்மில் பலர் மிகுந்த ஆவலோடும், ஆச்சரியத்தோடும் அனைத்து விதமான பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து ரசித்து வருவோம்.

ஆனால், மிகுந்த ஆர்வம் கொண்ட சிலர் ஏதேனும் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவது உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி இருந்த திறந்தவெளி அகழிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்ததையும், அதைத் தொடர்ந்து அந்தப் புலி அவரை அடித்துக் கொன்றதையும் செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து வைத்திருக்கும் நாம், அந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.

நல்லெண்ணத்தோடு ஆர்வமாக பார்த்து ரசிக்க முயற்சிப்பவர்களும் ஏதேனும் சிக்கல்களில் மாட்டிக் கொள்வது உண்டு. ஆனால், சேட்டையும், திமிரும் கொண்ட சிலர், விலங்குள் மீது எதையேனும் விட்டு எறிவது, அவற்றை அச்சுறுத்தும் காரியங்களை செய்வது போன்ற விபரீத முயற்சிகளை மேற்கொள்வார்கள். இது எல்லாவற்றையும் அடித்து, நொறுக்கும் விதமான அதிர்ச்சிகரமான சம்பவம் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : பூங்கா அருகே சுருண்டு விழுந்த நாய் - உயிர் காக்கும் சிகிச்சை அளித்த நபருக்கு பாராட்டு

அகழியில் நின்று கொண்டிருந்த கரடியை எல்லோரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பலர் முன்னிலையில் தனது 3 வயது குழந்தையை தாய் ஒருவர், அகழிக்குள் தள்ளி விட்டார். கல் நெஞ்சம் கொண்ட அந்த தாயின் செயல், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அகழிக்குள் விழுந்த அந்த சிறுமிக்கு அருகில் சென்று கரடி மோப்பம் பிடிக்க தொடங்கியது. பார்வையாளர்கள் இதுகுறித்து அலறியடித்தபடி பூங்கா ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

ஊழியர்கள் விரைந்து வந்து, அகழிக்குள் இருந்த கூண்டுக்குள் கரடியை விரட்டியடித்த நிலையில், அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் குறித்து எதையும் அலட்டிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தாய்.

 இதையடுத்து, காவல் துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்தனர். அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் என்று அந்நாட்டு காவலர்கள் தெரிவித்தனர். முன்னதாக, அகழிக்குள் தள்ளி விடப்பட்டதில் தலை மற்றும் உடலில் சிறிய அளவிலான காயங்கள் சிறுமிக்கு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : ஆத்தாடி.. யானைகிட்டயே பால் குடிக்கும் 3 வயது குழந்தை!

இதுகுறித்து விலங்கியல் பூங்காவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “பலரது முன்னிலையில் குழந்தையை அந்தத் தாய் அகழிக்குள் தள்ளி விட்டுள்ளார். அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்துவார்கள்.

அதேசமயம், நல்வாய்ப்பாக, சிறுமியை மோப்பம் பிடித்த பிறகு, அந்தக் குழந்தையின் தாயை பார்த்துக் கொண்டிருந்த கரடி, மேற்கொண்டு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது’’ என்று தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி