உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கியில் சைவ உணவு ஆர்டர் செய்த பிரபல தமிழ் பாடலாசிரியருக்கு சிக்கன் துட்டுடன் உணவு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனைக் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு பொதுமக்கள் பலர் ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டல்களுக்கு நேரடியாகச் சென்று சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்கின்றனர். இப்படி ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் கொஞ்சம் கசப்பான அனுபவங்கள் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்.
ஆனால், நீங்கள் விரும்பாத உணவுப் பொருட்களை உங்களுக்கான உணவுப் பொருட்களுடன் சேர்த்து அனுப்பி விடுவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். அப்படியொரு அதிர்ச்சிகரமான அனுபவம் தான் தமிழ் பாடலாசிரியர் மற்றும் வசன கர்த்தா கோ.சேஷாவிற்கு நடைபெற்றுள்ளது. ஸ்விக்கியின் துணை நிறுவனமான தி பவுல் என்ற நிறுவனத்திடம் இவர் கோபி மஞ்சூரியன் மற்றும் கார்ன் பிரைடு ரைஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்திருந்தார். உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதில் சிக்கன் துண்டுகள் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து டிவிட்டரில் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட பதிவில், “என் வாழ்நாள் முழுவதும் நான் சைவ உணவுப் பழக்கத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகிறேன். ஆனால், என் மதிப்புமிக்க குணத்தை அவர்கள் எவ்வளவு இயல்பாக வீணடித்துவிட்டார்கள் என்பதை எண்ணி வருத்தம் அடைகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Found pieces of chicken meat in the “Gobi Manchurian with Corn Fried Rice” that i ordered on @Swiggy from the @tbc_india. What’s worse was Swiggy customer care offered me a compensation of Rs. 70 (!!!) for “offending my religious sentiments”. 1/2 pic.twitter.com/4slmyooYWq
— Ko Sesha (@KoSesha) August 17, 2022
தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைத்து சேஷா புகார் அளித்தார். மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாகக் கூறிய நிலையில், அதற்கு ஈடாக ரூ.70 தொகையை ஸ்விக்கி திருப்பிச் செலுத்தியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தமக்கு உரிமை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சேஷாவின் டிவிட்டர் பதிவு வைரல் ஆகிய நிலையில், அதன் கீழ் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், “அது சிக்கன் துண்டுகள் தான் என உங்களுக்கு எப்படித் தெரியும். இதற்கு முன்பு சிக்கன் சாப்பிட்டு பார்த்துள்ளீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு சேஷா பதில் அளிக்கையில், “என்னுடன் இருந்த நண்பர்கள் அதைச் சுவைத்து சிக்கன் தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் மீதமுள்ள உணவைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் நேரடியாக வந்து சாப்பிட்டு உறுதி செய்யுங்கள்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chicken, Food Delivery App, Swiggy, Vegetarian