ரஷ்யாவின் கிழக்கு குடியரசான யாகுட்டியாவில் டைலுட் செய்யப்பட்ட சானிடைசரை உட்கொண்டதால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் நவ.23-ஆம் தேதியன்று கோமா நிலைக்குத் தள்ளப்பட்டனர். கடந்த 21-ஆம் தேதி ரஷ்ய புலனாய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாம்டர் எனும் கிராமத்தில் 9 உள்ளூர்வாசிகள் டைலுட் செய்யப்பட்ட சானிடைசரை உட்கொண்டதால் விபரீதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பெயரிடப்படாத 5 லிட்டர் கேன்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர். அந்தக் கேன்களை ஆய்வுசெய்தபோது, அதில் 69% மெத்தனால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவொரு தொழில்துறைக்குப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த சானிடைசரை குடித்ததால் பாதிக்கப்பட்ட முதல் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மருத்துவ விமானம் மூலம் பிராந்திய தலைநகர் யாகுட்ஸ்க்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.
Also read: குழந்தை பிறக்க பெண்கள் முதுகில் நடக்கும் சத்தீஸ்கர் சாமியார்கள் - வைரல் வீடியோ
மீதமுள்ள இருவரின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தற்போது போராடி வருகின்றனர். 48 வயதான பெண் மற்றும் 32 வயதான ஆண் ஆகிய இருவரும் கோமா நிலையில் வென்டிலேட்டர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் கடந்த 23-ஆம் தேதியன்று தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து மெத்தனால் அடிப்படையிலான ஹாண்ட் சானிடைசர் விற்பனைக்கு யாகுடியாவின் சுகாதார அதிகாரிகள் கடந்த 22-ஆம் தேதி தடை விதித்தனர்.
அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியதாக சானிடைசரை விற்றவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆல்கஹாலுக்கு மாற்றாக வேறு சிலவற்றை குடிப்பது ரஷ்யாவின் ஏழ்மையான பகுதிகளில் அடிக்கடி நடக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டில், சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் ஹாவ்தோர்ன் உள்ள குளியல் லோஷனை உட்கொண்ட 100-க்கும் மேற்பட்டோர் உடலில் விஷம் ஏறியதால் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவில் மது அருந்துதல் குறைந்துவிட்டாலும், மார்ச் மாதத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் மது விற்பனைக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு தடை விதித்தார். இருப்பினும் மது பழக்கம் கொண்டோர் இதுபோன்ற மெத்தனால் நிறைந்த ஆல்கஹாலை குடிப்பது தற்போது வழக்கமாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.