Home /News /trend /

ஆன்லைனில் விற்பனைக்கு வந்த மாம்பழம்... அசத்தும் கர்நாடகா அரசு

ஆன்லைனில் விற்பனைக்கு வந்த மாம்பழம்... அசத்தும் கர்நாடகா அரசு

மாம்பழம்

மாம்பழம்

Trending |ஆன்லைன் தளம் மூலமாக ஆர்டர் செய்யப்படும் மாம்பழங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் என கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் கழகம்

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான பருவ காலம் மாம்பழ சீசனாக கருதப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விதவிதமான அளவுகள் மற்றும் சுவைகளில் மல்கோவா, பங்கனபள்ளி, நீலம், ருமாணி, படாமி, செந்தூரா, அல்போன்சா உள்ளிட்ட பல வகையான மாம்பழங்கள் விளைகின்றன. கோடை காலம் வந்துவிட்டாலே தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட பழவகைகளைப் போலவே மாம்பழ்த்திற்கான மவுசும் அதிகம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் மாம்பழத்தின் ருசிக்கு அடிமையாகிப்போகும் காலம் இது.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மாம்பழ சீசனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசு களமிறங்கியுள்ளது. தனது மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் மாம்பழங்களை நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் இணையதளத்தில் சேவையை கடந்த மே 16ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த போர்ட்டலை கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் (KSMDMCL) இந்தியா அஞ்சல் துறையுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரை பெங்களூருவில் உள்ள கிராமப்புறங்கள் உட்பட 16 மாவட்டங்களில் சுமார் 1.68 ஹெக்டேர் பரப்பளவிற்கு மாம்பழங்கள் பயிரடப்படுகிறது.

www.karsirimangoes.karnataka. gov.in என்ற இணையதளம் மூலமாக கர்நாடகாவில் விளையும் பல விதமான மாம்பழங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். 2020ம் ஆண்டு முதல் கர்நாடகா அரசு மேற்கொண்டு வரும் இந்த முயற்சியால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

கர்நாடக அரசின் இந்த ஆன்லைன் இணையதளம் மூலமாக 2020ல், மாநிலம் முழுவதும், 35 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, மொத்தம் 100 டன் மாம்பழம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2021ல் குறைந்த அளவிலான மகசூல் கிடைத்த போதிலும், 45 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 79 டன் மாம்பழம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நல்ல தரமான மாம்பழங்களை ஆன்லைனில் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.

இந்த ஆன்லைன் தளம் மூலமாக ஆர்டர் செய்யப்படும் மாம்பழங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் என கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் (KSMDMCL) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டத்தை அஞ்சல் துறையுடன் இணைந்து கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த இணையதளத்தில் மாம்பழத்தின் போட்டோஸ் மற்றும் அதன் வகை, பெயர் போன்ற விவரங்களோடு, வாடிக்கையாளர் எந்த விவசாயியிடம் இருந்து மாம்பழங்களை வாங்குகிறார் என்ற விவரங்களும் இடம் பெறுகிறது. விவசாயியின் பெயர், தொடர்பு எண்கள் மற்றும் குறிப்பிட்ட விவசாயி என்ன வகையான மாம்பழங்களை உற்பத்தி செய்கிறார் போன்ற விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

வாடிக்கையாளர் ஆன்லைனில் ஆர்டர் செய்ததும், குறிப்பிட்ட விவசாயியின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஆர்டர் மெசெஜ் கிடைத்ததை அடுத்து விவசாயி, பெங்களூரு பொது தபால் நிலையத்திற்கு மாம்பழங்களை அனுப்பிவைப்பார், அங்கிருந்து அது குறிப்பிட்ட வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு, ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமியான துளசி குமாரி ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்க மாம்பழம் விற்பனை செய்தார். நியூஸ் 18 லோக்மத் டிஜிட்டல் தளத்தில் சிறுமியின் வறுமை குறித்த செய்தி வெளியானதை அடுத்து, மும்பையைச் சேர்ந்த அமேயா ஹெட்டே என்பவர் சிறுமி விற்பனை செய்த 12 மாம்பழங்களையும் ரூ.1.20 லட்சத்திற்கு வாங்கிக்கொள்வதாக கூறி, உடனடியாக சிறுமியின் தந்தை கணக்கிற்கு பணத்தையும் அனுப்பிவைத்தார். மும்பை தொழிலதிபரின் இந்த உதவியால் சிறுமி துளசி குமாரி 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் மற்றும் ஆண்டு முழுவதுக்குமான இன்டர்நெட் இணைப்புடன் கல்வி கற்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Elakiya J
First published:

Tags: Mango, Telangana

அடுத்த செய்தி