• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • மாணவர்கள் ஸ்கர்ட் அணிந்து வாருங்கள்! ஆச்சரியப்பட வைக்கும் பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு

மாணவர்கள் ஸ்கர்ட் அணிந்து வாருங்கள்! ஆச்சரியப்பட வைக்கும் பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு

ஆச்சரியப்பட வைக்கும் பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு

ஆச்சரியப்பட வைக்கும் பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு

ஆணோ பெண்ணோ தனக்கு பிடித்த ஆடையை அவர்கள் அணிவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிற புரிதல் முதலில் வர வேண்டும்.

 • Share this:
  21-ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பல்வேறு மூடத்தமான வேற்றுமைகள் நம்மிடையே இருந்து வருகிறது. ஆண் என்பவன் பெண்ணை விட மேலானவன், பெண்களின் ஆடை மீது சமூகம் செலுத்தும் கட்டமைப்பு, ஜாதி பாகுபாடு, இனவாதம்.. இப்படி பல வித தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் இன்றும் உள்ளது. இவை பலவற்றிற்கும் அடிப்படையான ஆண்-பெண் பாகுபாட்டை பற்றி பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ, வீட்டிலோ, நண்பர்களிடமோ இதைப்பற்றிய புரிதல் நமக்கு கிடைப்பதில்லை. காரணம் இங்கு பள்ளிகளிலே இதை பற்றிய புரிதல் குறைவாக தான் உள்ளது.

  திரைப்படங்களில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக அவர்களின் ஆடைகளை ஆண்களுக்கு போட்டு விட்டு அவமானப்படுத்துவதாகவும், மிக மோசமாக கேலி செய்வதுமான காட்சிகளை வைக்கின்றனர். இதை பார்க்கும் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டு சிரிப்பார்கள். ஏன் பெண் அணியும் உடையை ஆண் அணிந்தால் அவ்வளவு கேவலமா? ஆடைகளில் நாம் தான் பாகுபாட்டை உருவாக்கி வைத்துள்ளோம். ஆணோ பெண்ணோ தனக்கு பிடித்த ஆடையை அவர்கள் அணிவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிற புரிதல் முதலில் வர வேண்டும். இப்படிப்பட்ட புரிதலுக்காக ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் புது முயற்சி ஒன்றை அப்பள்ளி நிர்வாகம் எடுத்துள்ளது.

  கேஸ்டில் வியூவ் பிரைமரி ஸ்கூல் என்கிற பள்ளியில் சமீபத்தில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட மெயிலில் பலருக்கு அதிர்ச்சியும், புதுமையும் காத்திருந்தது. ஆண், பெண் சமத்துவம் பற்றிய புரிதலை மாணவர்களுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் நவம்பர் 4ம் தேதி அன்று ஸ்கர்ட்டை ஆண் பிள்ளைகள் அணிந்து வரவேண்டும் என்று அந்த மெயிலில் குறிப்பிட்டு இருந்தனர்.

  மேலும் உங்களுக்கு ஸ்கர்ட் அணிவதில் அசௌகரியம் இருந்தால் அதற்கு கீழ் ட்ரவுசர் அல்லது லெக்கிங்ஸ் அணிந்து கொள்ளலாம். தனது வீட்டில் ஸ்கர்ட் இல்லாதவர்களுக்கு பள்ளியில் இருந்தே ஸ்கர்ட் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவித்திருந்தனர். "ஆடைகளில் ஆண்-பெண் என்கிற பாலின பேதமில்லை என்றும், நாம் விரும்பும் விதத்தில் சுதந்திரமாக நமக்கு பிடித்த ஆடைகளை அணிவது அவரவர் விருப்பம் என்பதை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வரவே இந்த ஏற்பாடு" என்று கடைசி வரியில் குறிப்பிட்டு இருந்தனர்.

  இதை பார்த்த பல பெற்றோர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆடை என்பது எப்போது சந்தைப்படுத்தப்பட்டதோ அப்போதில் இருந்தே அதற்கான பாகுபாடு தொடங்கி விட்டது. இப்படி பலகாலமாக தவறான புரிதலை பல தலைமுறைக்கு கடத்தி வந்ததால் நிச்சயம் இந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும்.

  ஒரு சில பெற்றோர்கள் இதைப்பற்றிய தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டனர். அதில் ஒருவர் "என் மகனுக்கு 5 வயது தான் ஆகிறது. எனவே குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார். மற்றொருவர் "ஆண் பிள்ளைகள் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் ஸ்கர்ட் அணிந்து கொள்ளட்டும்; அதற்கு தடை விதிக்க கூடாது. ஆனால், கட்டாயப்படுத்தவும் கூடாது" என்று பதிவு செய்துள்ளார்.

  சில காலங்களுக்கு முன்பு ஸ்காட்லாந்து பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு மாணவர் ஸ்கர்ட் அணிந்து வந்ததால் அந்த பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதை பற்றி சமூக ஊடகங்களில் பல ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிர்வலையை ஏற்படுத்தினர். பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் ஸ்கர்ட் அணிந்து பள்ளிக் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் பின் ‘Clothes Have No Gender’ (‘ஆடைகளுக்கு பாலினம் இல்லை’) என்கிற இயக்கத்தை உருவாக்கி ஆடை சுதந்திரத்தை பற்றிய விழிப்புணர்வையும், புரிதலையும் பரப்பி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: