ஒரு கையில் துப்பாக்கி, மற்றொரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண் - அதிர்ச்சியளிக்கும் காட்சி
ஒரு கையில் துப்பாக்கி, மற்றொரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண் - அதிர்ச்சியளிக்கும் காட்சி
Ukraine Women (Credits : Twitter/@stratcomCenttre)
Russia Ukraine War | ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாளுக்கு, நாள் சீர்குலைந்து வரும் நிலையில், தாய் நாட்டுக்காக பெண்களும் துப்பாக்கி ஏந்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு என்பது, உலக மக்களுக்கு கடந்த கால போர் சம்பவங்களை நினைவூட்டி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாபெரும் யுத்தமாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைனில் ரஷிய ராணுவம் நிகழ்த்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் நிகழ்வுகள் தான், சர்வதேச அளவில் அண்மைக் காலமாக தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன.
போரில் குடியிருப்பு பகுதிகளும் தாக்கப்பட்டு வரும் சூழலில், ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அதேசமயம், ஜார்ஜியன் பாரா மிலிட்டரி திட்டத்தின்படி தன்னார்வலர்களும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் உக்ரைன் ஆண்கள் பலர் கைகளில் ஆயுதங்களை ஏந்தி, ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.
இந்த செய்திகளை அடியொற்றி, தற்போது வெளிவந்திருக்கும் தகவல், உலக மக்களின் கவலைகளையும், வேதனைகளையும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்துள்ளது. அதாவது, சாலையை கடந்து செல்லும் பெண் ஒருவர் இடது கையில் துப்பாக்கியை தொங்கவிட்டபடி நடந்து செல்கிறார். அந்தப் பெண்ணின் வலது கையை பிடித்துக் கொண்டு அவரது குழந்தையும் நடந்து செல்கிறது.
— Stratcom Centre UA (@StratcomCentre) March 5, 2022
உக்ரைன் நாட்டின் கலாசாரம் மற்றும் தகவல் கொள்கை அமைச்சகத்தின் சார்பில் டிவிட்டரில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. “ஒவ்வொரு உக்ரைன் தாயாரின் அற்புதமான குணத்தை வெளிப்படுத்துவதாக இந்தப் படம் இருக்கிறது’’ என்று ஃபோட்டோவுக்கு அந்த அமைச்சகம் தலைப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாளுக்கு, நாள் சீர்குலைந்து வரும் நிலையில், தாய் நாட்டுக்காக பெண்களும் துப்பாக்கி ஏந்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. டிவிட்டரில் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு நபர்களின் மனதும் கொதித்து எழுகிறது என்பதற்கு அவர்கள் பதிவிடும் எமோஜிகள் சாட்சியாக உள்ளன. இதைப் பார்த்ததும் கண்களில் நீர் கசிந்து விட்டதாக பயனாளர் ஒருவர் கூறியிருக்கிறார். மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், “உக்ரைனில் உள்ள ஒவ்வொரு தாயாருக்கும் இதை சொல்லிக் கொள்கிறேன். தைரியமாக இருங்கள். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் நீங்கள் பலமானவர்கள்’’ என்று கூறியுள்ளார்.
To every Ukraine mother out there. Stay strong, you are more stronger than you think. 🇺🇦 #StandWithUkraine️
— Ty Sheppard 🏳️🌈🏝 (@paradiseshepp15) March 6, 2022
போர் நிறுத்த அறிவிப்பு இடையிலும் குண்டுவெடிப்பு
பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா கூறியிருந்தது. கிவிவ், மாரிபோல், கார்கிவ், சுமி போன்ற நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், ரஷ்ய படைகள் ஆங்காங்கே குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை தடுக்க தவறி விட்டதாக மேற்குலக நாடுகள் மீது உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Published by:Selvi M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.